Published : 08 Oct 2014 11:25 AM
Last Updated : 08 Oct 2014 11:25 AM

நாளை உலக அஞ்சல் தினம்: சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி - வட்டார தலைமை அஞ்சலர் பேட்டி

உலக அஞ்சல் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை ஒரு வார காலத்துக்கு ‘தேசிய அஞ்சல் வாரம்’என்று இந்திய அஞ்சல் துறை கொண்டாடவுள்ளது. இதற்காக 13-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தபால் தலை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வட்டார தலைமை அஞ்சல் அதிகாரி டி.மூர்த்தி கூறியுள்ளார்.

இன்றைக்கு இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், என்று விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும், விரலால் கடிதம் எழுதி தபால் பெட்டிகளில் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. ஸ்காட்லாந்தில் 1712-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் நிலையம்தான் உலகின் மொத்த தபால் நிலையங்களுக்கும் தாய் வீடாகும். இன்றைக்கும் அந்த தபால் நிலையம் மக்கள் சேவையாற்றி வருகிறது. இன்றைக்கு உலகில் 8 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன.

ஸ்விஸ் தலைநகர் பெர்னெயில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி ‘சர்வதேச தபால் ஒன்றியம்’ தொடங்கப்பட்டதையொட்டி இந்த உலக அஞ்சல் தினம் கொண் டாடப்படுகிறது. இந்தியாவில் இதனை அக்டோபர் 9 முதல் 15 –ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த ஒரு வார காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சலர் டி.மூர்த்தி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. நிறைய முன்னோடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்தில், ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் வாங்கும் பொருட்களை போஸ்ட் மேன்களின் மூலமே கொண்டு போய் சேர்க்கிற பணிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 36 லட்சம் கணக்குகள் உள்ளன. இதன் மொத்த காப்பீட்டு மதிப்பு ரூ.15,000 கோடியாக உள்ளது.

ஒரு வாரம் கொண்டாட்டம்

உலக அஞ்சல் தினம் மற்றும் இந்திய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தமிழக வட்டார தபால் துறை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. இதற்காக வருகிற 9-ம் தேதி உலக அஞ்சல் தினம், 11-ம் தேதி சேமிப்பு தின நாள், 12-ம் தேதி அஞ்சல் தினம், 13-ம் தேதி தபால் தலை தினம், 14-ம் தேதி வியாபார விருத்தி தினம், 15-ம் தேதி அஞ்சலக ஆயுள் காப்பீட்டு தினம் என பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடவுள்ளோம். இதில் முக்கியமாக வருகிற 13-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சிகளை நடத்தவுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x