Published : 24 Apr 2014 12:00 AM
Last Updated : 24 Apr 2014 12:00 AM

நாற்பதுக்கு நாற்பது சாத்தியம்தானா?- தமிழக அரசியல் கட்சிகளின் பலம் - பலவீனம் என்ன?

தமிழகத் தேர்தல் களத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் நாற்பதும் நாங்களே (புதுச்சேரியையும் சேர்த்து) என மார்தட்டிச் சொல்லி முடித்திருக்கின்றன. இந்த நிலையில் இந்தத் தேர்தலில், முக்கியக் கட்சிகளுக்கு சாதக, பாதக விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதிமுக:

இரட்டை இலையும் ஜெயலலிதாவும்தான் பிரதானம் என்பதால் வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் வேட்பாளர் தேர்வில் அசாத்திய நம்பிக்கையை கடை பிடித்திருக்கிறது அதிமுக. இதுவே சில இடங்களில் சறுக்களையும் உண்டாக்கலாம். ‘அம்மா’ திட்டங் களும் விலையில்லாப் பொருட் களும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போடு கிறார்கள். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மிரட்டிக் கொண்டிருக்கும் மின்வெட்டுப் பிரச்சினை, சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் செய்யாமல் இருப்பது, தமிழகம் தழுவிய பெரிய திட்டங் களை செயல்படுத்தாமல் இருப் பது, திமுக தொடங்கிய திட்டங் களை முடக்கியதாகச் சொல்லப் படும் குற்றச்சாட்டுகள், கடைசி நேரத்தில் கம்யூனிஸ்ட்களைக் கழற்றிவிட்டது, உள்ளுக்குள் ஒளிவு மறைவாக வைத்திருக்கும் மோடி பாசம் இவை அனைத்தும் இந்தத் தேர்தலில் அதிமுக-வுக்கு சவாலாக அமையலாம்.

திமுக:

காங்கிரஸை ஒதுக்கிவிட்டு தனித்துப் போட்டியிடுவது திமுக-வுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடும். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்றிருக்கும் ஓட்டுகளை கூட்டிக் கழித்துப் பார்த்து திமுக இந்த உண்மையை நிச்சயம் புரிந்துகொள்ளும். அழகிரி விவகாரம் இந்தத் தேர்தலில் திமுக-வை தோற்கடிக்கும் அள வுக்கு சலனத்தை உண்டாக்காது. ஆனால், அண்ணனுக்கும் தம்பிக் கும் இடையில் நடக்கும் இந்த அதிகார யுத்தம் திமுக தொண்டர் களை சோர்வடைய செய்தது உண்மை.

‘பெற்ற பிள்ளையைக் கட்டுக்குள் வைக்க முடியாத தலை வர்’ என்ற அவச்சொல்லுக்கும் கருணாநிதி ஆளாகி இருக்கிறார். இந்த விமர்சனங்கள் இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு சவால். அதிமுக-வை போலவே திமுக-விலும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் பல குழப்பங்கள் நடந்திருக்கின்றன. எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என் பதற்காக பல இடங்களில் தொழிலதிபர்களைத் தேடிப் பிடித்து வேட்பாளர்களாக திணித்திருக்கிறது திமுக. இதனால் கட்சிக்குப் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. அதேசமயம் குறைவான கட்சிகள் என்றாலும் கூட்டணி அமைத்த விஷயத்தில் திமுக தனது இமேஜை உயர்த்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறுபான்மையினரின் ஓட்டுகளை சிரமப்படாமல் பெறுவதற்கு திமுக-வுக்கு இந்த அணுகுமுறை கைகொடுக்கலாம்.

பாஜக:

பாஜக-வுக்கு தமிழகத்தில் சரியான அடித்தளம் இல்லாத தால் மோடி அலை மோடி மஸ்தான் அலையாகிவிட வாய்ப்பிருக் கிறது. இது தெரிந்துதான், தங்களுக் கான பங்கைக் கூட குறைத்துக் கொண்டு மெகா கூட்டணியை உருவாக்கி இருக்கிறது பாஜக - அதுவும் முரண்பட்ட கட்சிகளை சேர்த்துக்கொண்டு. அப்படியிருந்தும் பெரிய அளவில் வெற்றிக்கான வெளிச்சக் கீற்று தெரியவில்லை. இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் பாஜக தன்னை பலப்படுத்திக்கொள்ளும் வேலைகளை செய்ய வேண்டும்.

மதிமுக:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், வைகோவால் ஈழத் தமிழர் விவகாரத்துக்கு தீர்வு கண்டுவிட முடியுமா? கூடங்குளம் அணு உலையை இழுத்து முடிவிட முடியுமா? என்று சாதாரண வாக்காளரும் காதுபடக் கேட்கிறார்கள். சிறுபான்மையினர் நலனில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று சொல்லும் வைகோ, ராமர் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம் அமல், 370-வது சட்டப் பிரிவு நீக்கம் இதையெல்லாம் பாஜக அரசு அமலாக்க நினைத்தால் வைகோ-வின் நிலை என்ன? - என்கிற கேள்விகள் இப்போதே எழுகிறது. இந்தத் தேர்தலில் வைகோ கௌரவமான கூட்டணியில் இடம் பிடித்திருக்கிறார். இது மதிமுக-வின் அடிப்படை சித்தாந்தத்தை தகர்த்துவிடாமல் இருக்க வேண்டும்.

தேமுதிக:

பாஜக கூட்டணியின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கியாக தேமுதிக பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பிரேமலதா தனது உயிரைக் கொடுத்து உழைத்திருக் கிறார். ஆனால், விஜயகாந்த் தனது வழக்கமான நடவடிக்கைகளால் அவரது உழைப்புக்கு ஒட்டு மொத்தமாக உலை வைத்திருக் கிறார். 2016-ல் முதல்வர் என தன்னை பிரகடனப்படுத்திக்கொள் கிறார் விஜயகாந்த், ஆனால், பொது இடங்களில் அவர் நடந்துகொள்ளும் விதம், கடந்த தேர்தல்களில் தன்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களை முகம்சுளிக்க வைக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும் .

காங்கிரஸ்:

தனித்து நிற்கும் இவர்களின் அசாத்திய துணிச்சலை பாராட்டியே தீர வேண்டும். இந்தத் தேர்தல் இவர்களுக்கு சோதனையான காலகட்டம் என்றாலும் தங்களின் நிஜமான பலம் என்ன என்பதை இவர்கள் தெரிந்துகொள்ளப் போகும் தேர்தல். காங்கிரஸுக்கு எதிரான விமர்சனங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கூட்டணிக் கட்சிகள் செய்த ஊழல்களுக்கு எல்லாம் காங்கிரஸ் ஜவாப்தாரி ஆகி இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பிரச்சாரக் களத்துக்குக் கொண்டு செல்ல ஆட்கள் இல்லாதது காங்கிரஸின் துரதிருஷ்டம். காங்கிரஸுக்கான இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்காலத்தில் திமுக-வுடன் கூட்டணி வைப்பதற்கான சூழலை உண்டாக்கலாம்.

இடதுசாரிகள்:

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அனைத்து விஷயத்திலும் அதிமுக-வுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டதன் பலனை இந்தத் தேர்தலில் எதிர்கொள்கிறார்கள் இடதுசாரிகள். அப்படியே அதிமுக கூட்டணியில் இடம் கிடைத்திருந்தாலும் தலா ஒரு எம்.பி-க்கள் இடதுசாரிகளுக்கு கிடைத்திருப்பார்கள். ஆனால், அதைவிட தனித்து நிற்கும் அவர்களின் இந்த முடிவு சரியே. ஆனாலும் ’காங்கிரஸுக்கு நிகரான பாரம்பரியம் கொண்ட இடதுசாரி கள் 40 தொகுதிகளில் வேட் பாளர்களை நிறுத்தும் அளவுக்குக் கூட கட்சியை வளர்த்துக் கொள்ளவில்லையே’ என்று மற்றவர்கள் விமர்சிப்பதையும் காதில் போட்டுக்கொண்டால் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x