Published : 31 Aug 2016 08:53 AM
Last Updated : 31 Aug 2016 08:53 AM

நாமக்கல், சிவகங்கையில் புதிய தொழிற்பேட்டைகள்: சென்னை அருகே ரூ.50 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் - சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நாமக்கல், சிவகங்கை மாவட்டங் களில் ரூ.36 கோடியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடன் புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன்கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 395 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.1 லட்சத்து 101 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 16 தொழிற்பேட்டைகள் அமைக் கப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங் களுக்கு ரூ.470 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள மின் மற்றும் மின்னணு தொழிற் பேட்டைகளில் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், தெரு விளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.50 லட்சத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் 12 லட்சத்து 94 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், 5 லட்சத்து 44 ஆயிரம் குறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க முன்வருவதில்லை. மேலும், பெருநகரங்களில் வாடகை அதிகரித்து வருவதால் குறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, குறு உற்பத்தி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, சிட்கோ நிறுவனம் மூலம் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென அடுக்குமாடி தொழில் வளாகம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும். இத்தொழில் வளாகம் ஒவ்வொன் றும் சுமார் 750 சதுர அடி பரப்பில் 250 அலகுகள் கொண்டதாக இருக்கும். இந்த அடுக்குமாடி தொழில் வளாகம் சென்னைக்கு அருகில் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் அமைக்கப் படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் தொழில் தொடங்க வசதியாக உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ரூ.36 கோடியில் 186 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டைகள் நிறுவப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் பங்களிப் புடன் ராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் 478 ஏக்கரில் தனியார் தொழில் முனைவோர்களால் அமைக் கப்படவுள்ள தொழிற்பேட்டை களில் மின் இணைப்பு, தண்ணீர் வழங்குதல், காட்சி, கருத்தரங்க கூடங்கள், விற்பனை வசதி மையங்கள் அமைத்தல் ஆகிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகள் ஏற்படுத்த அரசு மானியமாக ரூ.27 கோடி வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தரம் வாய்ந்த தொழிற் பேட்டைகளை நிறுவ 2013-ம் ஆண்டு அரசு கொள்கை முடிவை அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு 11 சதவீத பங்களிப்புடன் சிட்கோ - தனியார் கூட்டு முயற்சியில் 2 தொழிற்பேட்டைகள் நிறுவப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x