Published : 23 Mar 2017 03:58 PM
Last Updated : 23 Mar 2017 03:58 PM

நல்லாண்டான்கொல்லை மக்கள் போராட்டத்தைக் கைவிட வாசன் வேண்டுகோள்

நல்லாண்டன்கொல்லை மக்கள் மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டான்கொல்லை ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், விளைநிலங்கள் பாதிக்கப்படும், விவசாயத்தொழில் தடைபடும், நீர் ஆதாரம் குறையும், இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குரியதாகிவிடும்.

எனவே தான் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதற்காக நெடுவாசல், வடகாடு, நல்லாண்டான்கொல்லை பகுதிகளில் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பல துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என அப்பகுதியில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயமும் தங்களை வருத்திக்கொண்டு அறவழியில் போராடினர்.

இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தமாகா உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களும் ஆதரவு அளித்தனர். நெடுவாசல் பகுதியில் கோட்டக்காடு உட்பட அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்களின் போராட்டம் 22 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசும் மற்றும் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நெடுவாசல் அருகே உள்ள வடகாட்டில் 19 நாட்களாகவும், நல்லாண்டான்கொல்லையில் 36 நாட்களாகவும் போராட்டம் நீடிக்கிறது. இப்போராட்டத்தால் இவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக தொழில் செய்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும், வருமானம் ஈட்டுவதற்கும் முடியாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் விவசாயம் தான் இப்பகுதியில் பிரதான தொழிலாக இருப்பதால் விவசாயத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை கைவிட்டு இப்பகுதி விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டும்.

நேற்றைய தினம் நெடுவாசல் போரட்டக்குழுவினர் டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்தித்து பேசிய போது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்ட நெடுவாசல் பகுதி மக்களிடம் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அளித்த வாக்குறுதியை வடகாடு, நல்லாண்டான்கொல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உடனடியாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் உறுதி அளிக்கும் பட்சத்தில் வடகாடு மற்றும் நல்லாண்டான்கொல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு தாங்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x