Last Updated : 23 Nov, 2014 10:31 AM

 

Published : 23 Nov 2014 10:31 AM
Last Updated : 23 Nov 2014 10:31 AM

நன்கொடைகளை 10 நாட்களுக்குள் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்: கருப்புப் பண நடமாட்டத்தை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகள்

கருப்புப்பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும் புதிய வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து பதிவுபெற்ற அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

தேர்தலின்போது கருப்புப் பணப் புழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கவும், அரசியல் கட்சிகள் தங்களது செலவினங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. அது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பதிவுபெற்ற அரசியல் கட்சிகளுக்கும் கடந்த ஆகஸ்ட் 29-ல் கடிதம் எழுதியிருந்தது. அதற்கு சில கட்சிகள் ஆட்சேபம் தெரிவித் திருந்தன. சில சந்தேகங்களையும் எழுப்பியிருந்தன. குறிப்பாக, ஆண்டுதோறும் வரவு - செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கடுமையாக எதிர்த்தன.

அவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தேர்தலை நியாயமான முறையில் நடத்தும் புனிதமான கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. சமீபகாலமாக தேர்தலின்போது கருப்புப்பணப் புழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளுக்குமிடையே சமநிலை உருவாக்கும் சூழலுக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது. அதன்காரணமாகவே, புதிய விதி முறைகளை வகுக்க வேண்டிய நிலை ஆணையத்துக்கு ஏற்பட் டுள்ளது.

அரசியல் சாசனப் பிரிவு 324-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் அனைத்துக் கட்சிகளையும் கட்டுப்படுத்தும். அரசியல் கட்சிகள் ஆண்டு தோறும் தங்களது வரவு - செலவு கணக்கை சமர்ப்பிப்பது அத்தியாவசியமான ஒன்று. தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் இருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்கவே, நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள், தனி நபர்களின் பெயர் மற்றும் முகவரிகள் தொடர்பான பதிவேட்டை தொடர்ந்து பராமரித்து வரவேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடையை (பொதுக் கூட்டம், பேரணிகளில் உண்டியல் மூலம் கிடைப்பதைத் தவிர்த்து) அன்றாட செலவுகள்போக, 10 அலுவலக வேலை நாட்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட வேண்டும். ஒரு கட்சியின் ரொக்கக் கையிருப்பானது, கடந்த நிதியாண்டில் அதே காலகட்டத்தில் இருந்த சராசரி மாத கையிருப்புத் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கக் கூடாது.

தேர்தல் செலவுகளுக்கு ஒரு நாளில் ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான தொகையை தனி நபருக்கோ, வேறு நிறுவனத்துக்கோ வழங்குவதாக இருந்தால் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் மூலமாகத்தான் பரிவர்த்தனை மேற்கொள்ளவேண்டும். இந்நடவடிக்கை தேர்தல் காலங்களில் அதிக பணம் தேவையின்றி புழங்குவதைத் தடுக்கும். நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைளை பின்பற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகும்.

இவ்வாறு கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x