Published : 24 Oct 2014 01:31 PM
Last Updated : 24 Oct 2014 01:31 PM

நடிகர் எஸ்.எஸ்.ஆர் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல்

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "பழம்பெரும் திரைப்பட நடிகரும், எஸ்.எஸ்.ஆர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான "லட்சிய நடிகர்" எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86-வது அகவையில் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் "முதலாளி" என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத் தந்தது. "குமுதம்", "சாரதா", "சிவகங்கை சீமை", "தை பிறந்தால் வழி பிறக்கும்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் "லட்சிய நடிகர்" என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x