Published : 25 Feb 2015 08:30 AM
Last Updated : 25 Feb 2015 08:30 AM

தேமுதிகவுக்கு ஆதரவாக பேரவையில் வெளிநடப்பு: கூட்டணிக்கு திமுக, காங்கிரஸ் அச்சாரமா?

சட்டப்பேரவையில் தேமுதிகவுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் குரல் வலுத்துவரும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி தேமுதிக எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் தினமும் கோரிக்கை எழுப்பினர். ஆனால், அதுபற்றி பேச அனுமதி கிடைக்காததால் இரு கட்சிகளும் 2 நாட்கள் வெளிநடப்பு செய்தன.

தேமுதிகவுக்கு ஆதரவாக பேரவையில் திமுகவும் காங்கிர ஸும் செயல்பட்டது, அந்தக் கட்சியுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி சேருவதற்கான முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கள் மீது இதுபோன்ற நடவடிக்கை கடந்த காலங்களிலும் எடுக்கப் பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது வாடிக்கையானதுதான். கோரிக்கையை ஏற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோர் மீதான தண்டனையை குறைப்பார்கள்.

ஆனால், தற்போது சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கக்கூட அனுமதிப்பதில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது. சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏக்களை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது.

அதேநேரத்தில், இது சட்டப்பேரவை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சி ஆகாது. அதற்கு இன்னமும் நிறைய நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான், கூட்டணி பற்றி பேச முடியும்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரணியிடம் கேட்டபோது, ‘‘எதிர்க் கட்சி இல்லாத அவை மக்களுக்கு நன்மையை விளைவிக்க முடியாது. அதனால்தான் இந்த விவகாரத்தில் தேமுதிகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம். இதை சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி முயற்சி என கருதக்கூடாது. தேமுதிக மட்டுமல்ல, எந்தக் கட்சியினர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கும்’’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கூட்டணி பற்றி நாங்கள் தற்போது சிந்திக்கவே இல்லை. கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து தலைவர் விஜயகாந்த் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டணி அமைப்பது குறித்தும், கட்சியின் இறுதி முடிவையும் தலைவர்தான் அறிவிப்பார். எனவே, நாங்கள் தற்போது கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x