Published : 28 Nov 2014 07:06 PM
Last Updated : 28 Nov 2014 07:06 PM

தேசிய பார்வை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் திகழும்: திருச்சியில் வாசன் பேச்சு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 'தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)' கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தற்போது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சியின் கொடியை அவர் நேற்று முன்தினம் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிமுக பொதுக்கூட்டம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், "இன்றைய தினம் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) இயக்கம் தொடங்கப்படுகிறது. தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்படுவோம். தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்துவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பாடுபடும்.

'வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்பதே கட்சியின் கொள்கை. தனி வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, நிர்வாகத்தில் வலிமை என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவோம்

காமராஜர் வழியைப் பின்பற்றும் நமது கட்சிக்குத் திரண்டிருக்கும் இந்தக் கூட்டம், தமிழகத்தில் முதன்மை இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் திகழும் என்பதை நிரூபிக்கிறது.

காங்கிரஸ் எங்கே என்று கேட்போருக்கு பதில் சொல்லும் கூட்டமாகவே இது இருக்கிறது. இனிமேல் உத்தரவுகளுக்காக மேலிடத்திடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பிரச்சினையை பேச நேரம் கேட்க வேண்டிய அவசியமில்லை.

மக்களுக்கு சேவை செய்வதே எங்களது கடமையாக இருக்கும். திருச்சி கூட்டம் நமக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மீனவர்கள், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக தமிழ் மாநில கட்சி இருக்கும்.

நமது கட்சி சுயநலத்தைப் பொருட்படுத்தாமல், பொது நலத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் என்பதில் உறுதி.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான ஜனநாயகம், மதசார்பின்மை போன்றவை அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே புதிய இயக்கத்தைத் தோற்றுவித்துள்ளோம்.

சில மாநில கட்சிகள் தமிழர்கள், தமிழ் என்று கூறிக்கொண்டு, தேச ஒற்றுமையைப் புறம்தள்ளுகின்றன. தேசிய கட்சிகளோ, தமிழர்களின் நலனிலே அக்கறை இல்லாமல் செயல்படுகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தேசிய பார்வை கொண்ட மாநில கட்சியாகத் திகழும்.

காமராஜர் ஆட்சி என்கிறோமே அதன் பொருள் என்ன? எங்கே நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான, மக்களுக்கான ஆட்சி இருக்கிறதோ, அதுதான் காமராஜர் ஆட்சி. அந்த உயர்ந்த லட்சியத்தை அடைவோம்.

நமது பயணம் கடினமானது. பல சவால்களை நிறைந்த இந்தப் பயணத்தில் சோதனைகளைச் சாதனைகளாக்கி, தமிழ் மாநில காங்கிரஸ் முன்னோக்கிச் செல்லும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை என தமிழர்களின் உரிமைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் உயிரைக் கொடுத்தும் உரிமையைப் பாதுகாப்போம். அதேபோல், நாட்டில் மதவாத்தை தலைதூக்க விடமாட்டோம். ஏழை, எளியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

எங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், இளைஞர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

விவசாயம் இன்று நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. விளைநிலங்கள் தரிசாகவும், வீட்டு மனைகளாகவும் மாறி வருகின்றன. விவசாயிகளின் நலனைக் காக்க பாடுபடுவோம்.

நாங்கள் நேர்மையான, நியாயமான, ஊழலற்ற நிர்வாகத்தைத் தருவோம். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடும் தமிழ் மாநில காங்கிரஸ், மக்களின் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும்" என்றார் வாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x