Last Updated : 19 Apr, 2016 07:44 AM

 

Published : 19 Apr 2016 07:44 AM
Last Updated : 19 Apr 2016 07:44 AM

தெளிவான மதுவிலக்கு கொள்கைக்கு நிதானமாக யோசியுங்கள்!

தமிழ்நாட்டில் மதுவிலக்கு ஒரு மிக முக்கியமான தேர்தல் அறிவிப்பாக உள்ளது. அ.தி.மு.கவை தவிர மற்ற முக்கிய கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவதாக அறிவித்துள்ளன. அதிமுக படிப்படியாக அமல்படுத்துவதாக கூறுகிறது. மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு அனைத்தையும் மாநில அரசுகளே முடிவு செய்யவேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டத்தின் ஓர் கூறு. எனவே ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான மதுவிலக்கு கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. ஒரே மாநிலத்தில் கூட அவ்வப்போது இந்த கொள்கையில் மாற்றங்கள் வரும்.

தரமான மது விற்பனையை உறுதி செய்யவும், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய்களை எளிதில் வசூலிக்கவும் மொத்த மது விற்பனையையும் அரசு நிறுவனமான டாஸ்மாக் 1980 முதல் செய்து வருகிறது. இன்று `டாஸ்மாக்' சில்லறை மது விற்பனையிலும் உள்ளது. எனவே பல மாறுதலுக்கு உட்பட்ட ஒரே கொள்கை மதுவிலக்கு கொள்கைதான். ஆனால், 2003 தொடங்கி இந்தக் கொள்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

உற்பத்தி தவிர மொத்த மற்றும் சில்லறை மது விற்பனை முழுவதையும் `டாஸ்மாக்' நேரடியாக எடுத்த நடத்த தொடங்கிய பிறகு; இதன் நுகர்வை அரசு கட்டுப்படுத்த தவறியது மட்டுமல்லாமல் அதனை ஊக்குவிக்கவும் செய்துவருகிறது என்பது குற்றசாட்டு.

2003 தொடங்கி அரசின் மது மீதான வரி வருவாய் அதிகரித்தபோது மது நுகர்வின் அளவும் அதிக அளவில் வளர்ந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த 12 ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஆண்டுதோறும் மது நுகர்வின் அளவு 30 சதவீதம் வரை வளர்ந்தது. எல்லா வயதினரும் எல்லா பொருளாதார நிலையில் உள்ளவர்களும் மது அருந்துவதை அதிகரித்துக்கொண்டே போகின்றனர்.

இது ஒரு கலாச்சார மாற்றமா? இந்தக் கலாச்சார மாற்றத்துக்கு துணையாக மதுவை எளிதாக நுகரக்கூடிய வகையில் `டாஸ்மாக்' கடைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் மற்றொரு காரணமா? கலாச்சார மாற்றத்தை தடுத்து, மது அருந்துவதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை யில்லையா?

இதுபோன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, இதற்கு எதிர்மறையான கேள்விகளும் வைக்கப்படுகின்றன. அருகில் உள்ள மாநிலங்களில் மது விற்பனையைத் தடை செய்யாதபோது மதுவிலக்கை அமல்படுத்துவது கடினம், கள்ளச் சாராய உற்பத்தி ஒருபுறம் பெருக, மற்றொரு புறம் அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தலும் அதிகமாகும். மதுவுக்கு அடிமையானவர்கள் உடனடியாக மது அருந்துவதை நிறுத்தினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு பல ஐயங்களை எழுப்பி பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மதுவிலக்கினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி சரிசெய்வது? கூடுதல் நிதி ஆதாரங்கள் உண்டா? மணல், தாதுமணல், கிரானைட் வியாபாரத்தில் இருந்து கூடுதல் நிதி பெறலாம் என்பது ஒரு சிலர் கூறும் யோசனை. அரசு இலவசங்களை கொடுக்காமல் இருந்தால் கூடுதல் நிதி தேவை இல்லை என்பது மற்றுமொரு கருத்து.

மது துறையை முறையாக கட்டுப்படுத்தினாலே போதும் என்பது அரசியல் சாராத சிந்தையாளர்கள் சிலர் முன் வைக்கும் யோசனை.

பூரண மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பு

மது உற்பத்தியும் நுகர்வும் சமுதாய கட்டுப்பாட்டில் இருந்த வரை மதுவிலக்கு பெரிய பிரச்சினையாக இல்லை. வெளிநாட்டு மது வகைகள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து விற்பனைக்கு வந்த பிறகு, மது சந்தைமயமாகிவிட்ட பிறகு, மதுவிலக்கு அரசின் கைக்கு சென்றது.

மது உற்பத்தி மற்றும் நுகர்வை நேரடியாக தடுப்பதற்கு பதில், மது மீது வரி விதிப்பதன் மூலமாக மது நுகர்வை கட்டுப்படுத்தத் தொடங்கியது அரசு. இதனால் வரி வருவாய் பெருகவே, அரசு கூடுதல் வருவாயுடன் புதிய செலவினங்களை செய்ய ஆரம்பித்தது. மது மீதான வரி விதிப்பை அதிகரித்து, அதன் மூலம் மது நுகர்வை கட்டுப்படுத்துவதாக சொல்லிய அரசுகளுக்கு, கூடுதல் வரி வருவாய்தான் முதன்மை குறிக்கோளாக மாறியது. அரசின் செலவினங்கள் மேலும் பெருக, இன்று மது மீதான வரி வருவாய் இல்லாமல் அரசுகள் செயல்படாத நிலையை அடைந்துள்ளன.

பூரண மதுவிலக்கால் ஏற்படும் உடனடி வருவாய் இழப்பை எப்படி ஈடு செய்வது என்பதை `கூடுதல் வருவாய் பெற்று ஈடு செய்வோம்' என்று ஒற்றை வரியில் முடித்துவிட முடியாது. தற்போது வரை, மிக எளிதாக மது மீதான வரியினால் பெறப்பட்ட வருவாய் காரணமாக மற்ற வரிகளை சேகரிப்பதில் ஓரளவுக்கு சுணக்கம் இருந்திருக்கலாம். எனவே, முனைப்புடன் மற்ற வரிகளை சேகரிக்கும்போது கூடுதல் வருவாய் வரலாம்.

இன்றையச் சூழலில் வியாபாரமும் அரசியலும் பின்னிப்பினைந்த பிறகு, வரி வருவாயை முழுவதுமாக வசூலிக்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. வரி ஏய்ப்பும் கள்ளப் பணமும் அரசியல் மற்றும் வியாபாரத்துடன் கலந்துவிட்ட பிறகு, கூடுதல் வரி வருவாய் மிக வேகமாக வளரும் என்பதில் நம்பிக்கை குறைகிறது.

ஆட்சியில் இருந்திருக்கிற அல்லது ஆட்சியை பிடிக்க நினைக்கிற எந்த ஒரு கட்சிக்கும் மாநில வரி ஆதாரங்களும், அவை முழுமையாக வசூலிக்க முடிகிறதா, வரி வசூலிப்பில் உள்ள நடைமுறை சிக்கல் என்ன, என்பது பற்றி தெளிவான புள்ளிவிவரங்களும், மற்ற ஆவணங்களும் தெரியும். கூடுதல் வரி வருவாய் திரட்டுவோம் என்று சொல்லுகின்ற கட்சிகள், எந்த அளவுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும், அவற்றை இப்போது ஏன் திரட்டவில்லை? புதிய நிதி ஆதாரங்கள் என்ன என்பது பற்றி முழுமையான அறிக்கை தரவேண்டும்.

ஆற்று மணலில் இருந்து வருவாய் வரும், தாது மணலில் இருந்து வருவாய் வரும், கிரனைட் மூலம் வருவாய் வரும் என்று சொல்பவர்கள்கூட, இன்றைய தேதியில் இந்த இயற்கை வளங்கள் எவ்வளவு உள்ளன அவற்றில் எவ்வளவு விற்பனை செய்ய முடியும்? அவ்வாறு செய்தால் எவ்வளவு கூடுதல் வருவாய் வரும், என்று தெளிவான யோசனைகளை முன்வைக்கவேண்டும்.

புதிய வருவாய் இனங்களைத் தேடும் அதே நேரத்தில் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதும் அவசியம். பொத்தாம்பொதுவாக இலவசங்களைக் குறைப்போம் என்பதைவிட, எந்த செலவினங்களை குறைக்கமுடியும் என்று இனம் காண வேண்டும். இவற்றைப் பற்றி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தெளிவின்மை உள்ளது.

உடனடி பூரண மதுவிலக்கும் மருத்துவமும்

உடனடி பூரண மதுவிலக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ உலகம் சொல்லி வருகிறது. மது குடிக்கும் பழக்கம் ஆண்களிடம் வேகமாக வளர்ந்து வர, பெண்களிடமும் பரவி வருவதாக WHO-வின் அறிக்கை கூறுகிறது. இதேபோன்று மதுவுக்கு அடிமையானோரின் விழுக்காடும் அதிகரிக்கிறது. இவர்கள் உடனடியாக மது அருந்துவதை நிறுத்துவதால் ஏற்படும் மனநல பாதிப்பு, உடல்ரீதியான பாதிப்புகளை மருத்துவ விஞ்ஞானம் மூலமே அணுகவேண்டும்.

போதைக்கு அடிமையாவதில் இருந்து நீக்கும் மையங்கள் (De-addiction Centres) தமிழகத்தில் குறைவாகவே உள்ளன. அவற்றில் பல செயல்படுவதில்லை. உரிமம் பெறாத பல மையங்கள் அடிப்பதையே வழிமுறையாகக் கொண்டு போதைக்கு அடிமையாவதை நீக்குவதாக சொல்லி மேலும் மனரீதியாகவும உடல்ரீதியாகவும் கேடுகளை உண்டாக்குகின்றன. எந்தவித மருத்துவ சான்றிதழும் இல்லாமல் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க மருந்துகள் விற்கின்றனர். இன்று வரை மத்திய மாநில அரசுகளின் சுகாதார கொள்கையில் ‘போததைக்கு அடிமையாவதை தடுப்பது’ என்பது ஒர் அங்கமாக இல்லை. மத்திய அரசின் ‘சமூக நீதித் துறை’ தான் போதைக்கு அடிமையாவதை தடுக்குத் தொண்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குகிறது. அதுவும் ஒரு சில கோடி ரூபாய்கள்தான். இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு இது எப்படி போதுமானதாக இருக்கும்?

மது அருந்துவது சமூக கேடு, ஒழுக்கக் கேடு எனவும், போதைக்கு அடிமையாவதை சுதாகாதார பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும். தமிழக அரசுகூட கடந்த வருடம் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் முறைகள், அது தொடர்பான மையங்களை ஒழுங்குபடுத்த ஒரு குழுவை `சமூக நல துறையில்' நியமித்து அதன் அறிக்கையும் பெறப்பட்டது. இப்போது அந்த அறிக்கையை விவாதித்து செயல்படுத்த வேண்டும்.

கேரளா அரசு, போதைக்கு அடிமையாவதை தடுப்பது மதுவிலக்கு கொள்கையின் முக்கிய அங்கமாக பார்க்கிறது. இதற்காக உயர்நிலை அமைப்பை ஏற்படுத்தி, மாநிலம் முழுவதும் போதைக்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் நிலையங்களை ஒருங்கிணைத்து அவற்றின் செயல்பாடுகளை உயர்த்த முயற்சிக்கிறது.

மது அருந்துவோர், அவர்களின் பிரச்சினைகள் பற்றி எவ்வித புள்ளிவிவரங்களும் இல்லாமல் இருப்பத்துதான் மதுவிலக்கு கொள்கையை சரிவர அமல்படுத்துவதற்கான பெரிய தடை. மது தொடர்பான மறைமுக விளம்பரங்கள் எல்லாம் இளம் வயது நுகர்வோரை குறிவைக்கின்றன. இளம் வயதில் மது அருந்தும் பழக்கம் ஏற்படும்போது, போதைக்கு அடிமையாவது எளிதாகிவிடுகிறதா என்ற விஞ்ஞான ஆராய்ச்சி தேவை. அரசுக்கே வருடத்துக்கு ரூ33,000 மது வரி வருவாய் வருவதால், 32 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ரூ2௦௦௦ கோடிக்கு மது விற்பனை நடைபெற வேண்டும். ஆக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மது அருந்துபவர்களும், மதுவுக்கு அடிமையானவர்களும் அதிகமாக இருக்க, போதை அடிமையில் இருந்து அவர்களை மீட்பதற்கு தேவைப்படும் நிர்வாக, மருத்துவ, மனநல ஆலோசனை மையங்களும் அதிகமாக இருக்கவேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தவேண்டும். இவற்றை ஓரிரு ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாது. இதற்கு தேவைப்படும் மருத்துவர்களை உருவாக்கவே சில ஆண்டுகளாகும். எனவே, நீண்டகால திட்டம் தேவை. இவற்றையல்லாம் விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயல்படுத்தக் கூடிய திட்டம் ஒன்றினை எந்தக் கட்சியும் முன்வைக்கவில்லை.

பூரண மதுவிலக்கும் சட்டம் ஒழுங்கும்

பூரண மதுவிலக்கு என்பது வெளிச்சந்தையை கள்ளச்சந்தையாக மற்றும் வழி என்று கூறுகின்றனர். மது உற்பத்தி தடை செய்யப்பட்டாலும், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவது மனிதர்கள் கையில்தான் உள்ளது. ஏற்கெனவே கலால் துறையினால் வரையப்பட்டுள்ள மது கடை தொடர்பான பல வரையறைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் கடைபிடிக்கவில்லை என்று மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. ஒரு அரசுத் துறை வரையறைகளை ஏற்படுத்தி அதனை அத்துறை சார்ந்த ஒரு நிறுவனம் நடைமுறை படுத்தாதது எதை காட்டுகிறது?

இன்றைய தேதியில் 6500 முதல் 7000 மதுபான கடைகள் உள்ளன. இவற்றை முழுவதுமாக ஒரே நாளில் மூடினால், மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழலில் மதுவிலக்கை அமல்படுத்த மட்டுமே மிகப்பெரிய காவல் துறை தேவைப்படும். மதுவிலக்கு அமலாக்கத்துறையின் காவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு, இதனை எத்தனை மடங்கு அதிகமாக்கவேண்டும், அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும், எவ்வளவு கூடுதல் செலவு ஆகும். இந்த விவரங்கள் உள்ளனவா? கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

அரசின் எந்த ஒரு அமலாக்கத் துறை யிலும் ஊழல், அரசியல் தலையீடு எல்லாம் இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. மதுவிலக்கு அமலாக்கத்துறை மட்டும் சிறப்பாக செயல்படுமா? மற்ற துறைகளிலிருந்து மாறுபட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை சிறப்பாக செயல்பட என்ன செய்யவேண்டும்?

சில செயல்திட்ட ஆலோசனைகள்

புதிதாக மது அருந்துபவர்களை தடுப்பது மிக அவசியம். புகை யிலை ஏற்படுத்தும் கேடுகளை பற்றிய விரிவான விளம்பரம் செய்த, செய்து கொண் டிருக்கிற நன்மைகளை நம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. அது போன்று மது அருந்துவது ஒழுக்க, சமூக கேடு என்பதை பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்கள், செயல் திட்டங்கள் அவசியம்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யப்பட்ட பிறகு இன்று திரையரங்குகளில் புகைப்பிடிப்பது முழுவதும் குறைந்துவிட்டது. கேரளாவில் சாலைகளில் புகைப்பிடிப்பவர்களை காணமுடியாது. தமிழகத்தில் அந்த நிலை இன்னும் வரவில்லை, வரவேண்டும். இன்று தேசிய அளவில் பீடி சிகரெட் உற்பத்தி அதிகமாகும் விகிதம் குறைந்திருக்கிறது. எனவே, மதுவின் கேடு பற்றிய விழிப்புணர்வு திட்டங்களும், சட்டங்களும், அவற்றை சரியாக நடைமுறைப்படுத்துவதும் மதுவிலக்கு நோக்கிய பயணத்தின் முதல் படியாக இருக்கவேண்டும்.

இளைஞர்கள் மது அருந்துவதை கடினமாக்கவேண்டும். ஓட்டுநர் உரிமம் போல மது அருந்த அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெறவேண்டும். இதனால் மது அருந்துபர்களின் எண்ணிக்கை, அவர்களின் மது அருந்தும் போக்கு பற்றிய புள்ளிவிவரங்கள் சேகரித்து, போதைக்கு அடிமையாவதை தடுக்க முடியும்.

மதுக்கடைகள் நடத்துவதற்கான எல்லா சட்டத்திட்டங்களையும் மாநில அரசு ஏற்படுத்தவேண்டும். ஆனால் மதுக் கடைகளுக்கான உரிமத்தை உள்ளாட்சி அமைப்புகளால் மக்கள் மன்றத்தில் முடிவு செய்யவேண்டும்.

நகரத்தில் உள்ள வார்டு மக்கள் கூட்டத்திலும், கிராமத்தில் உள்ள கிராம சபைகளிலும் மட்டுமே மதுக் கடைகளுக்கான இடங்களும், உரிமமும் விவாதித்து வழங்கப்படவேண்டும். ஒரு கிராம அல்லது வார்டு சபை தங்கள் பகுதியில் மதுக் கடைக்கான உரிமம் வழங்கக்கூடாது என்று முடிவு செய்தால், அக்கிராமத்தில் அல்லது வார்டில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. இவ்வாறு மக்களின் நேரடி பங்கேற்பில் மது கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுவதால், மதுக் கடைகளுடைய எண்ணிக்கை குறையும்.

மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு பலவகை செலவுகள் செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, மதுவிலக்கு துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தேவை. மதுவினால் கிடைக்கும் அனைத்து வருவாயும் மதுவிலக்கு செயல்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும்.

எந்த ஒரு நிதிநிலை அறிக்கைக்கும் வரவு, செலவு என்ற இரண்டு பகுதிகள் வேண்டும். மதுவிலக்கை படிப்படியாக செயல்படுத்துவதால் அடுத்த சில ஆண்டுகள் வரை கணிசமான வரி வருவாய் மது விற்பனையினால் வரும். இதனைக்கொண்டு, மதுவிலக்கு அமலாக்கத்துறையை அமைக்கவும், போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மருத்துவ செலவினத்துக்கும், மதுவிலக்கு விழிப்புணர்வு விளம்பரங்களுக்கும் பயன்படுத்தவேண்டும். மதுவிலக்கு துறை நிதி நிலையில் முதல் சில ஆண்டுகளில் உபரி வருவாய் இருக்கும், அதனை சரியாக முதலீடு செய்து, அடுத்து வரும் ஆண்டுகளில் மதுவிலக்கிற்காக செலவு செய்யவேண்டும்.

மதுவிலக்கு துறைக்கு தனியான நிதி நிலை இருப்பதால், மதுமீதான வரிவருவாயை நம்பி அரசு செலவுகளை அதிகரிப்பதை தடுக்க முடியும். அதே நேரத்தில் மது நுகர்வு முழுவதும் குறையும் வரை மதுவிலக்கு தொடர்பான எல்லா செலவுகளுக்கும் நிதி தொடர்ந்து கிடைக்கும். சில வருடங்கள் கழித்து பூரண மதுவிலக்கு என்ற நிலையை அடைந்தால், அப்போதும் மதுவிலக்கு தொடர்பான செலவுகள் ஓரளவுக்கு இருக்கும். அதனை மாநில பொது நிதியிலிருந்து பெற்று செலவு செய்யவேண்டும்.

இவ்வாறு மதுவிலக்கு நிதி நிலையை மையமாகக்கொண்டு மதுவிலக்கு கொள்கையின் எல்லா அம்சங்களும் தீர்மானிக்கப்படவேண்டும். மதுவிலக்கு அமலாக்கத்துறை சிறப்பாக செயல்பட அரசியல் குறுக்கீடு இல்லாத சிறந்த அலுவலர்கள் தேவை. முடியுமா?

பூரண மதுவிலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும்

* அ.தி.மு.க முதலாக பலர் முன்மொழியும் மற்றுமொரு அணுகுமுறை மதுவிலக்கை படிப்படியாக நடைமுறைப் படுத்துவது. இதில் பல நன்மைகள் உண்டு.

* அரசுக்கு உடனடியாக பெரிய வருவாய் இழப்பு ஏற்படாது

* சரியான திட்டமிடல் மூலமாக வீண் செலவுகளை படிப்படியாக குறைக்கமுடியும்.

* மது நுகர்வை குறைக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை களை சிறப்பாக வடிவமைத்து செயலாக்க திட்டமிட முடியும்

* மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்த மீட்க மருத்துவ ரீதியாக அணுகவும், மருத்துவ உதவி செய்வதற்கு வேண்டிய செயல் திட்டங்களையும், அதற்கான நிதி ஆதாரங்களையும் திரட்டமுடியும்.

* சாராயம் உற்பத்தி செய்ய உள்ளீட்டு பொருளாக உள்ள வெல்லபாகை (molasses) எப்படி பெட்ரோலில் சேர்ப்பது, மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தி கூடுதல் நிதி திரட்டுவது என்பனவற்றை முடிவுசெய்யவேண்டும்.

தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x