Published : 26 Oct 2016 08:13 AM
Last Updated : 26 Oct 2016 08:13 AM

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 4,400 சிறப்பு பஸ்கள்: இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 4,400 சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகை யில் சிறப்பு பஸ்கள் அக். 26 (இன்று), 27, 28 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளதாக போக்கு வரத்துறை தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் கூடுதலாக 26-ம் தேதி (இன்று) 979 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 27-ம் தேதி 1,717, 28-ம் தேதி 1,704 என 3 நாட்களுக்கு 4,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் மொத் தமாக 3 நாட்களுக்கு11,225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 26-ம் தேதி 2,507 சிறப்பு பஸ்கள், 27-ம் தேதி 3,488, 28-ம் தேதி 4,069 என மொத்தம் 10,064 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அண்ணாநகர்

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் அண்ணாநகரில் (மேற்கு) உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். நாள் ஒன்றுக்கு 240 பஸ்கள் வீதம் 3 நாட்களுக்கு மொத்தம் 720 பஸ்கள் இயக்கப் படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். 26-ம் தேதி 186 பஸ்கள், 27-ம் தேதி 194, 28-ம் தேதி 194 என மொத்தம் 574 பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம்

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தட பஸ்கள் (எஸ்இடிசி உட்பட) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து புறப்படும். 26-ம் தேதி193 பஸ்கள், 27-ம் தேதி 230, 28-ம் தேதி 230 என மொத்தம் 653 பஸ்கள் இயக்கப்படும்.

பூந்தமல்லி

பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். 26-ம் தேதி 402 பஸ்கள், 27-ம் தேதி 494, 28-ம் தேதி 494 என மொத்தம் 1,390 பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 26-ம் தேதி 2,233 பஸ்கள், 27-ம் தேதி 2,834, 28-ம் தேதி 2,821 என மொத்தம் 7,888 பஸ்கள் இயக்கப்படும்.

ஊரப்பாக்கம்

கோயம்பேடு பஸ் நிலையங் களில் இருந்து பயணம் செய்யும் வகையில் முன்பதிவு செய்த பயணிகள், மாற்றியமைக்கப்பட்ட பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் செய்ய வேண்டும். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பயணம் செய்யும் வகையில் முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத் துக்கு பஸ்களில் பயணம் செய்ய வேண்டும். மேலும், இந்த 3 நாட்களில் சென்னை கோயம் பேட்டிலிருந்து தற்காலிக பஸ் நிலையத்துக்கு மக்கள் சென்று வருவதற்கு வசதியாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இணைப்பு பஸ்களாக இயக்கப்படும்.

தீபாவளி முடிந்து திரும்புவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி முடிந்து திரும்புவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு பொதுமக்கள் திரும்புவதற்கு வசதியாக வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அவை தீபாவளிக்கு பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை அளவிலேயே இயக்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்டது போல் 300 கிமீ தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும், கம்ப்யூட்டர் மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தாம்பரம் சானடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு அலுவலகம், பூந்தமல்லியில் ஒரு சிறப்பு முன்பதிவு அலுவலகம் என மொத்தம் 29 முன்பதிவு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்பு முன்பதிவு அலுவலகங்கள் அக்டோபர் 24-ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் வரும் 28-ம் தேதி வரை செயல்படும். பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x