Last Updated : 25 Apr, 2017 07:11 PM

 

Published : 25 Apr 2017 07:11 PM
Last Updated : 25 Apr 2017 07:11 PM

திருப்பூர் ஹோட்டல் அபகரிப்புப் புகார்: ப.சிதம்பரம் உறவினருக்கு எதிரான குற்றச்சாட்டில் சிபிஐ-க்கு நோட்டீஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரி பத்மினி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சேர்ந்து கொண்டு ஹோட்டல் ஒன்றை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 25-ம் தேதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஆர்.கே.கவ்பா இந்த நோட்டீசை சிபிஐக்கு அனுப்பியுள்ளார். அதாவது தனது திருப்பூர் ஹோட்டலை அபகரித்ததாக கதிர்வேல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையில் ஜூலை 25-ம் தேதி நிலைஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றியும் கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ வழக்கறிஞர் ராஜ்தீபா பெஹூரா நோட்டீஸை ஏற்றுக் கொண்டு பதிலளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து மருத்துவராக தொழில் செய்து வரும் கதிர்வேல் செப்டம்பர் 2016-ல் சிதம்பரம், இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஐஓபி வங்கி அதிகாரிகள் ஆகியோர் தன் ஹோட்டலை அபகரித்ததாக சிபிஐ-யிடம் புகார் பதிவு செய்துள்ளார், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிறகே தான் சிபிஐ இயக்குநரிடம் புகார் செய்துள்ளதாகக் கதிர்வேல் தெரிவித்தார்.

2007-ல் கதிர்வேல் இது தொடர்பாக மேற்கொண்ட புகாரில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ளது ஹோட்டல் ‘கம்ஃபர்ட் இன்’, இதில் கதிர்வேல் ஒரு கூட்டாளி. இந்த விடுதியை ப.சிதம்பரத்தின் உறவினர் ஐஓபியின் முதன்மை மேலாள்ன்மை அதிகாரிகள் உதவியுடன் அபகரித்தனர் என்று கதிர்வேல் புகார் எழுப்பினார்.

இது குறித்து கதிர்வேல் சார்பாக வாதாடிய அவரது வழக்கறிஞர் யதீந்தர் சவுத்ரி கூறும்போது, இது முன்னாள் மத்திய அமைச்சர் குடும்பத்தினரின் அதிகார துஷ்பிரயோகமாகும். அதாவது வங்கியின் துணையுடன் ஒருவரது சொத்தை அபகரிப்பது அதிகாரத் துஷ்பிரயோகத்தின் தெளிவான உதாரணமாகும்.

ஹோட்டல் ஐஓபிக்கு அளிக்க வேண்டிய நிலுவைக் கடன் தொகையையும் செலுத்திவிட்ட பிறகு, வங்கி ஹோட்டலை பத்மினிக்கு அளிக்க ‘மாதிரி ஏலம்’ நடத்தினர்.

இந்த விடுதி ரூ.10 கோடி மதிப்பு கொண்டது, ஐஓபிக்கு அளிக்க வேண்டிய கடன் தொகை ரூ.2.5 கோடியாகும். இந்நிலையில் ஹோட்டலை செயலில் இல்லாத சொத்து என்று வங்கி அறிவித்து ஏலமும் அறிவிக்கப்பட்டது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், பிறகு கடன் மீட்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகியதோடு ஐஓபிக்கு ஏலத்தை தவிர்ப்பதற்காக ரூ.64 லட்சம் கொடுத்துள்ளதாக கதிர்வேல் தெரிவித்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட வங்கி ஏலத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தது என்று கூறிய கதிர்வேல், வங்கி தன்னை ஏமாற்றி ஏலத்தை நடத்தி ஹோட்டலை ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரி பத்மினிக்கு ரூ.4.5 கோடி என்ற மலிவு விலைக்கு ஒதுக்கியதாக கதிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில்தான் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் ஜூலை 25-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x