Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM

திருச்சி தொகுதி: நேரடிப் போட்டியில் அதிமுக– திமுக

திருச்சி மக்களவைத் தொகுதியில் இத்தேர்தலில் அதிமுக - திமுக இடையே தான் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ப.குமார் மீண்டும் களத்தில் உள்ளார். திமுக சார்பில் இரு முறை மாநகராட்சி துணை மேயராகவும், தற்போது மாமன்ற உறுப்பினராகவும் உள்ள மு.அன்பழகன் போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஏ.எம்.ஜி.விஜயகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பில் இருமுறை மாநகராட்சி மேயராகவும், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்த சாருபாலா தொண்டைமான் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.ஸ்ரீதர் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர ஆம் ஆத்மி சார்பில் ரவி மற்றும் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அமைந்துள்ளதால், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்த தொகுதி பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. இது அதிமுகவுக்கு சாதகம் என்றாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.குமாரின் வெற்றிக்கு கைகொடுத்த ஸ்ரீரங்கம் பகுதியில் இன்றும் தீர்க்கப்படாத அடிமனைப் பிரச்சினையும், எம்.பியாக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் குமார் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாததும் அதிமுகவுக்கு பாதகமாகவே அமையும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது தொகுதி பறிபோனதற்காக நோட்டாவுக்கு அதிக அளவில் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கிறது புதுக்கோட்டை பகுதி.

திமுக கூட்டணிக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ள தமுமுக, தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்களால் இந்த தொகுதியில் நிறைந்திருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அன்பழகனுக்கு கிடைக்கும் என்ற கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் திமுகவினர்.

தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர் என்ற போதிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் கூட்டணி எதுவும் இல்லையென்றாலும் கூட, கணிசமான வாக்குகளைப் பெறுவார். இது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது.

இந்த தொகுதியில் உள்ள கணிசமான உள்ள தொழிலாளர்களின் வாக்குகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கும் என்பதும், இடதுசாரி இயக்கங்களின் எளிமையான பிரச்சாரமும் நடுநிலையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவை வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருச்சி தொகுதியில் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி இருந்தாலும், திருச்சி தொகுதியில் அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும், கடந்த தேர்தலைப் போலவே மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிவாய்ப்பு நிர்ணயிக்கப்படும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x