Published : 18 Apr 2014 04:30 PM
Last Updated : 18 Apr 2014 04:30 PM

திமுகவை தோற்கடிக்க வாக்களியுங்கள்: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுறுத்தல்

இந்த தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும். அதனால் திமுக.வுக்கு எதிராக ஓட்டு போடவேண்டும் என்று தென் மண்டல திமுக முன்னாள் செயலா ளர் மு.க.அழகிரி பேசினார்.

காரைக்குடியில் திமுக பிரமுகர் இல்ல காதணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அழகிரி பேசியதாவது:

திமுக நம் கட்சி. நம் தலைவர் கலைஞர். அவரைச் சுற்றி தீயசக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும். உண்மையான கட்சியினருக்குப் பொறுப்பு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதை நான் கேட்டதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினர்.

என்னை நீக்கியதற்கு இதுவரை காரணம் தெரிவிக்கவில்லை. சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுப.துரைராஜ் அதிமுக.விலிருந்து வந்தவர். அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு சீட் ஒதுக்கியுள்ளனர். சுப.துரைராஜுக்கு அண்ணாவைத் தெரியுமா?, நமது இயக்கத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?. அவர் கட்சிக்காக எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?.

கட்சியில் தொடர்பே இல் லாத இப்படிப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துள்ளனர். இத்தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்கணும். அதனால் திமுக.வுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும். திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்குக்கூட வரக்கூடாது.

இங்குள்ள காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், எனது மகன் விபத்தில் சிக்கியபோது மூன்று முறை வந்து பார்த்தார். அதனால் கார்த்தி சிதம்பரமும் எனது நண்பர்தான். பாஜக வேட்பாளர் எச்.ராஜா என்னிடம் நேரடியாக ஆதரவு கேட்டார். அவரும் எனது நண்பர்தான்.

செய்தியாளர்கள் யாராவது என்னை சந்தித்தால், அழகிரி இவருக்கு ஆதரவு தருவதாகக் கட்டம் கட்டி செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால், நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை. எனக்கு அனைவரும் நண்பர்கள்தான். இந்தப் பேச்சைக்கூட கட்டம் கட்டிப் போட்டு விடாதீர்கள்.

என்னை தி.மு.க.வில் இருந்து சந்திப்பவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்கி விடுகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலிக்குச் சென்றேன். அப்போது என்னை சந்தித்த 11 பேரை கட்சியைவிட்டு நீக்கினர். சேலத்தில் நகர் செயலர் நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு என்னை சந்திப்பவர்களை, எனக்கு ஆதரவாகப் போஸ்டர் அடிப்பவர்களை நீக்குகிறார்கள். எனவே இவர்களுக்கு நாம் யார்?, நமது பலம் என்ன என்பதை இத்தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்றார் அழகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x