Last Updated : 28 Nov, 2014 09:14 AM

 

Published : 28 Nov 2014 09:14 AM
Last Updated : 28 Nov 2014 09:14 AM

திமுகவில் யாரும் எனக்கு எதிரி இல்லை: காங்கிரஸில் சேர்ந்த நடிகை குஷ்பு சிறப்புப் பேட்டி

திமுகவில் இருந்து நான் வெளியேறி விட்டாலும் அங்கிருப்பவர்கள் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:

பாஜகவில் சேருவீர்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீரென்று காங்கிரஸில் இணைந்துள்ளீர்களே?

இது நீண்டநாள் யோசித்து எடுத்த சரியான முடிவு. திமுகவில் இருந்து விலகினேனே தவிர அரசியலைவிட்டு விலகவில்லை. ஒரு கட்சியில் இருந்து விலகிய பின்னர், உடனடியாக இன்னொரு கட்சியில் சேருவது சரியாக இருக்காது.

பாஜகவில் முக்கியத்துவம் கிடைக் காது என்பதாலும் காங்கிரஸில் ராஜ்ய சபா எம்.பி. உள்ளிட்ட பதவிகள் கிடைக் கக்கூடும் என்பதால் இந்த முடிவா?

என்னைப் பொறுத்தவரை சாதி, மதம் இவற்றைக் கடந்து இந்தியர்கள் ஒரே குடையின்கீழ் வாழ வேண்டும். அதற்கு காங்கிரஸ்தான் சரியான இடம். பதவிக்கு ஆசைப்பட்டு காங்கிரஸில் இணையவில்லை. எனது உழைப்பு எப்படியிருக்கும், நான் என்னென்ன செய்யப்போகிறேன் என்பது போகப்போகத் தெரியும்.

திமுகவில் உங்கள் உழைப்பு ஒரு வழிப்பாதையாக இருந்தது என்று விலகினீர்கள், ஆனால், காங்கிரஸிலோ நிறைய தலைவர்கள், கோஷ்டிகள் உள்ளன. இவற்றை மீறி உங்களை நிரூபிக்க முடியுமா?

காங்கிரஸ் மாநில கட்சி கிடையாது, அது தேசிய கட்சி. 29 மாநிலங்களிலும் உழைப்பதற்கு ஏராளமான தலைவர் களும், தொண்டர்களும் இருப்பார்கள். ஆனால் அதையும் மீறி எனக்கு உழைக்க வும் அதை நிரூபிக்கவும் சரியான வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

திமுகவை காங்கிரஸில் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

எதற்காக நாம் இப்படி ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுகவில் எப்படி இருந்தது, காங்கிரஸில் எப்படி இருக்க போகிறது என்பதையெல்லாம் நாம் இப்போது பேச வேண்டிய தேவையில்லை. வருங்காலங்களில் எல்லாம் தெரியவரும்.

ஒருவேளை வருங்காலத்தில் திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உருவானால், உங்களுக்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்படாதா?

எதற்காக இவ்வளவு அவசரமாக யோசிக்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. நான் திமுகவி லிருந்து வெளியே வந்துவிட்டதால் அங்கிருந்தவர்கள் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. திமுக தலைவர்களோடு இன்றும் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் காங்கிரஸில் இணைந்த பிறகு நிறைய திமுகவினர் தொலைபேசி மூலம் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி பேசினாரா?

இல்லை. தலைவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

ஜி.கே.வாசன் புதுக்கட்சி கொடியை அறிவித்த நாளில் காங்கிரஸில் இணைந்துள்ளீர்களே?

ஜி.கே.வாசன் மீது எனக்கு நிறைய மதிப்பு, மரியாதை உண்டு. அரசியலில் நிறைய அனுபவம் கொண்ட அவர், ஏன் காங்கிரஸைவிட்டு வெளியேறினார் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி விசாரிக்கவும் விருப்பமில்லை. அவரைப்பற்றி பேசக்கூடிய தகுதி எனக்கு அறவே இல்லை.

ரஜினிகாந்தை இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது ரஜினிகாந்தின் தனிப்பட்ட விருப்பம். இதுபற்றி பேச எனக்கும் உங்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது

இலங்கை பிரச்சினை தொடர்பான ஒரு கூட்டத்தில் பேச முடியாமல் விம்மி அழுதீர்கள். இலங்கைப் பிரச்சினையை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் ஒருபோதும் எடுத்தது கிடையாது. இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளுக்காக பல கோடி ரூபாயை ஒதுக்கியது காங்கிரஸ்தான். ஆனால், சில கட்சிகள் வேண்டுமென்றே காங்கிரஸை தவறாக சித்தரித்துள்ளன.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x