Published : 23 Jul 2016 03:22 PM
Last Updated : 23 Jul 2016 03:22 PM

தயாசங்கர் சிங்கை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்க: வைகோ

மாயாவதியை இழிவாகப் பேசிய தயாசங்கர் சிங் மீது உ.பி.அரசு தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் மதவெறிக்கு ஊக்கம் தரப்படுகின்றது. அதனால், சாதிய வன்கொடுமைகள் தாண்டவமாடுகின்றன. அந்த வகையில்தான், உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை முதல்வர் பதவி வகித்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையாக விளங்குகின்ற மாயாவதியை கேவலமாகப் பேசி இழிவுபடுத்தி இருக்கின்றார், அம்மாநில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங்.

தயாசங்கருக்கு மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உத்தரப்பிரதேச அரசு தயாசங்கர் சிங் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து தயாசங்கர் சிங்கை கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டனை வழங்க வேண்டும்.

வகுப்புவாத வெறியர்களால் மரண பூமியாக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இந்துத்துவ ஆதிக்கச் சக்திகளின் வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. உனா கிராமத்தில் இறந்த பசு மாட்டின் தோலை உரித்தார்கள் என்று குற்றஞ்சாட்டி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களை காரில் கட்டி இழுத்துச் சென்று, காவல் நிலையத்தின் எதிரிலேயே கட்டி வைத்து இரும்புக் கம்பியால் அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர்.

மக்கள் கூட்டத்தில் வாழத் தகுதியற்ற இத்தகைய காட்டுமிராண்டிகள் மீது குஜராத் மாநில பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.

பிரதமரின் சொந்த மாநிலத்தில்தான் பசுவதை என்ற பெயரால் இந்துத்துவா கும்பல் இந்த ரத்தக் களரியை நடத்தி இருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் முகமது இக்லாக் என்ற இஸ்லாமியர் ஒருவரை பசுமாட்டு இறைச்சி வைத்து இருந்தார் என்று ஒரு கும்பல் அவரை அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து கொன்றனர். தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்று மத வெறியர்களால் கொல்லப்பட்ட இக்லாக் குடும்பத்தினர் மீதே உத்திரப்பிரதேச அரசு வழக்குத் தொடுத்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதவெறி சக்திகள் வகுப்பு மோதல்களைத் தூண்டவும், எதிர்க்கருத்து உரைப்போரை ஒழித்துக்கட்டவும் ஒரு பெருந்திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான், சிந்தனையாளர்களாக, சீர்திருத்தவாதிகளாக மதவாதத்திற்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து வந்த நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த பன்சாரே போன்றோர் திட்டமிட்டு, ஒரே வகையான துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சாதி, மத வேற்றுமைகளைக் களைய வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய பாஜக அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆர்.எஸ்.எஸ்.வழிநடத்துகிறது என்று பெருமையுடன் வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.

இத்தகைய மதவெறி சக்திகளின் கொட்டம் அடக்கப்படாவிடில், உத்திரப்பிரதேசம், குஜராத் மட்டும் அன்றி, நாடு முழுவதும் சாதி மத மோதல்கள் வளரக்கூடிய ஒரு பெரும் கேடு சூழ்ந்து வருகின்றது.

எனவே, மத்திய அரசு இந்தப் பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தி, சட்டப்படி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்; இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் நல்லிணக்கம் நிலவ உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x