Published : 30 Nov 2015 02:49 PM
Last Updated : 30 Nov 2015 02:49 PM

தமிழ் வழி வானிலை முதல் மழை விடுமுறை வரை: ரமணன் உடன் ஒரு சந்திப்பு

மழைக்காலம் வந்துவிட்டால் தொலைக்காட்சியில் வானிலை முன்னறிவிப்பு வருவது வழக்கமே. ஆனால், இந்த ஆண்டு மழை முன்னறிவிப்பை ஆர்வத்துடன் அதிகம் பார்த்தது பள்ளிக் குழந்தைகளே. காரணம் 'மழை விடுமுறை'. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரமணன் மீது தனி ஒரு பிணைப்பு ஏற்பட இந்த ஒரு காரணம் போதாதா என்ன?

மாணவர்கள் சிலர் ரமணனுக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை துவக்கியிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக ரமணனையும், மழை விடுமுறையும் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் ஏராளமாக உலா வருகின்றன.

வடகிழக்கு பருவமழையால் இந்த ஆண்டு விடப்பட்ட மழை விடுமுறை வரலாறு காணாதது. இந்த வரலாறு காணாத விடுமுறையும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் இன்னும் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ளதும் ஒரு யதேச்சையான நேர்க்கோட்டு நிகழ்வு.

இந்நிலையில் ரமணனை 'தி இந்து' (ஆங்கிலம்) சார்பில் பேட்டி கண்டோம்.

வானிலை ஆய்வுப் பணியை தேர்வு செய்தது ஏன்?

நான் முதுகலை பட்டப்படிப்பை முடித்தபோதுதான் தமிழகத்தில் பிளஸ் 2 என்ற ஒரு பாடத்திட்டம் அமலுக்கு வந்தது. அப்போது ஆசிரியர் பணிக்கு தேவை அதிகமாக இருந்தது. எனது நண்பர்கள் பலரும் ஆசிரியர் பணியை தேர்வு செய்தனர்.

ஆனால், எனக்கு வானிலை சார்ந்த படிப்பு மீது ஆர்வம் இருந்தது. எனவே, அந்த காலக்கட்டத்தில் அதிகம் கண்டு கொள்ளப்படாத வானிலை ஆய்வு பற்றிய படிப்பை நான் தேர்வு செய்தேன். படிப்படியாக உயர்ந்தேன்.

அறிவியலை நீங்கள் தமிழ்வழியில் விளக்குகிறீர்கள்.. உங்கள் தமிழ் ஆர்வம் குறித்து சொல்லுங்கள்?

எனக்கு தமிழ் இலக்கியம் மீது எப்போதுமே ஆர்வம் உண்டு. தேவாரத்தைப் படித்து வந்தேன். வானிலை அய்வு மையத்தில் நான் பணிக்குச் சேர்ந்த போது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்தேன். வானிலை அறிவியலை சாமான்ய மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டுமானால், அது தமிழ் மொழியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்தேன். அதனால், வானிலை சொற்றொடர்களை எளிமையாக்கினேன். வானிலை சார்ந்த தமிழ் வார்த்தைகள் கொண்ட விளக்கப் பட்டியல் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். அது இப்போது எங்கள் இணையதளத்தில் இருக்கிறது.

நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள், ஆனால் சர்வதேச அளவில் வானிலை தகவல்களை ஒருங்கிணைத்து கூறுகிறீர்கள். அது எப்படி?

ஆம், தெற்கு அந்தமானில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது என்று நான் கூறினால், அதற்காக நான் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தகவல்களைப் பெற வேண்டும். மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது என்று நான் கூறினால், இலங்கையில் இருந்து தகவல்களைப் பெற வேண்டும். வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்வேன். சிறிய ஆய்வு மையங்களின் தகவல்களைக் கூட நாங்கள் புறக்கணிப்பதில்லை. வானிலை ஆய்வில் யாரும் தனியாக வேலை பார்க்க முடியாது. ஒருங்கிணைந்த வேலை மூலமே தகவல்களைப் பெறுகிறோம்.

அப்படி இருந்தும், சில நேரங்களில் மழை அறிவிப்புகள் துல்லியமாக இல்லையே? ஆனால், மற்ற நாடுகளில் அவை சரியாக இருக்கின்றனவே?

ஒவ்வொரு பகுதிக்கும் வானிலை வேறுபடுகிறது. சில இடங்களில் குளிர்ந்த காற்றும், வெதுவெதுப்பான காற்றும் எப்போது சந்திக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால், நமது பிராந்தியம் வெப்பமண்டலம் சார்ந்தது. வானிலயைப் பொருத்தவரை உலகிலேயே இந்த பிராந்தியம் தான் மிகவும் கடினமானது என யாருக்கும் தெரியாது. இருப்பினும், பல நேரங்களில் துல்லியமான கணிப்பையும் தந்திருக்கிறோம்.

தொழில்நுட்ப வளர்ச்சியால், வானிலையை வலைப்பதிவர்கள் சிலரே முன்னறிவிப்பு செய்கின்றனர். இது குறித்து உங்கள் பார்வை?

இணையத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வானிலையை துல்லியமாகக் கணித்துவிட முடியாது. உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்ப்பட்டால் நீங்கள் மருத்துவமனைக்குச் செல்வீர்களா? இல்லை மருந்தகத்தை நாடுவீர்களா? இதற்கு நீங்கள் சொல்லும் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது.

இருந்தாலும், இத்தகைய வானிலை முன்னறிவிப்பு இணையதளங்களை சவாலாக கருதுகிறீர்களா?

நான் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறேன் (சிரிக்கிறார்).. வேறு ஒருவர் இந்த பதவிக்கு வருவார். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார். ஆனால், தனிநபர்கள் சிலர் தங்கள் இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு மாறாக தகவல்களைப் பகிர்ந்தால் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிட்டீர்கள். மாணவர்கள் உங்களை தெய்வமாக பார்க்கிறார்களே?

இதுபோன்ற விஷயங்களில் கவனத்தைச் சிதறவிட்டால் வேலையில் கவனம் சிதறும். அத்தகைய பதிவுகளை பார்த்திருக்கிறேன். ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். அவர்கள் குடும்பத்தாரைப் போலவே என்னை பாவிக்கின்றனர்.

சமூக வலைளதளங்களில் மக்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்பதில் ஆர்வமில்லையா?

வேலைக்கு முதலிடம். முக்கியத்துவம். அதனால் இவற்றை பெரிதாகக் கருதுவதில்லை.

உங்களுக்கான பணி நேரம் என்ன?

வானிலை ஆய்வுப் பணி 24/7 பணி. வார விடுமுறை ஏன் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் வேலை பார்த்திருக்கிறேன்.

மழைக் காலங்களில் பரபரப்பாக இருக்கும் நீங்கள், வெயில் காலத்தில் என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு நாளும் வானிலை நிலவரம் குறித்து என் உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் உரையாடுவேன். அதுதவிர வார இறுதி நாட்களில் கல்வி நிறுவனங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவேன்.

தபால் தலை, நாணயம் சேகரிக்கும் உங்கள் பொழுதுபோக்கு குறித்து சொல்லுங்கள்..

என் இளம் வயதில் என் மாமா எனக்கு சில தபால் தலைகளை அளித்தார். அன்று ஏற்பட்டதே இந்த ஆர்வம். தபால் தலைகளை சேகரிப்பதன் மூலம் உங்கள் அறிவாற்றல் மிகும். உதாரணத்துக்கு பொஹேமியா, மொராவியாவின் இந்த தபால் தலைகளில் ஹிட்லர் உருவப்படம் உள்ளது. இந்நாடுகள் ஒரு காலத்தில் ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்தன. போர்ச்சுகல் ஆட்சிக்கு முன்னர் மொசாம்பிக் நாட்டில் வெளியான தபால் தலை இது. தபால் தலைகள் சிலவற்றில் இருக்கும் இடங்கள் இப்போது இல்லை. இதுபோன்ற பல சுவாரஸ்யங்கள் உள்ளன.

இத்தகைய பொழுதுபோக்குகள் இன்று அழிந்து வருகின்றன. ஆனால், மாணவர்கள் இத்தகைய பொழுதுபோக்குகளைப் பழக வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள். உங்கள் ஓய்வு மாணவர்களுக்கு வருத்தமளிக்கும்..

(சிரிக்கிறார்) ஆனால் வேறு ஒருவர் அந்த பொறுப்புக்கு வருவார். வானிலை ஆய்வு தனி நபர் சார்ந்தது அல்ல. அது ஒரு அமைப்புச் சார்ந்தது. நான் ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வேன் என்பதற்கு காலம் பதில் சொல்லும். ஒரு மருத்துவமனையில் நான் குழு உறுப்பினராக உள்ளேன். ஒருவேளை அந்தப் பணியை செய்யலாம். விவசாயிகள் சிலர் வானிலை முன்னறிவிப்புகளை அளித்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். வானிலை ஆய்வியல் படிப்புகளை தொடங்குவதற்கான அறிவுரையை சிலர் கேட்டுள்ளனர். நான் எதிர்காலத்தில் என்ன செய்வேன் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

தமிழில்:பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x