Published : 25 Apr 2017 03:17 PM
Last Updated : 25 Apr 2017 03:17 PM

தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மின்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மின்துறை அமைச்சர் மணியை அம்மாநில முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2015-ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்திய பெண்கள், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுத்தனர். உரிமைகளுக்காக போராடிய பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண்கள் ஒற்றுமை என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி, தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவு மூணாறு அருகே அடிமாலி நகரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.எம்.மணி, ''பெண்கள் ஒற்றுமை அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இரவைக் கழிப்பவர்கள்'' என்று பேசியிருக்கிறார். மணியின் இந்த பேச்சுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் போதிலும் அவர் மீது கேரள முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று தொழிலாளர் உரிமைக்காக குரல் எழுப்புவது ஆகும். அந்தப் பணியைத் தான் பெண்கள் ஒற்றுமை அமைப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு உரிமைகளுக்காக போராடும் பெண்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இழிவுபடுத்துவதையும், அதை அக்கட்சித் தலைமை ஆதரிப்பதையும் பார்க்கும் போது தொழிலாளர் நலன் மற்றும் உரிமை, பெண்ணுரிமை குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழக்கங்கள் அனைத்தும் போலியானவை என்பது அம்பலமாகிறது.

தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மணியை கேரள முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மணி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-வது பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x