Published : 08 Feb 2016 03:13 PM
Last Updated : 08 Feb 2016 03:13 PM

தமிழில் முழுமையாக வழிகாட்டும் மகாமகம் செயலி: அரசு பள்ளி ஆசிரியர் குழுவின் அசத்தல் ஆப் முயற்சி

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு செயலி ஒன்றைத் தயார் செய்து அசத்தியிருக்கின்றது அரசுப் பள்ளி ஆசிரியர் பெருமாள் ராஜ் தலைமையிலான ஆசிரியர்க் குழு. இச்செயலி மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே உள்ள புனித நீராடல் வழக்கம் மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும்.

மகாமக திருக்குளம் உருவானது எப்படி, தலவரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், திருக்குள அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள் செயலியின் முகப்பில் மிளிர்கின்றன.

கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள கோயில்களின் வரலாறு, திருவிழாக்கள், வழிபாட்டு நேரம், தொலைபேசி, அமைவிடம் உள்ளிட்டவை விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல்கள், திருக்கோயில்கள் வழிகாட்டியின் உதவியுடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்காக, அங்கே அமைந்துள்ள விடுதிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் இணையதள முகவரியோடு தரப்பட்டிருக்கிறது. விடுதிகளோடு, உணவகங்களின் பெயர்களும் தொகுக்கப்பட்டுள்ளன. சைவ உணவகம், அசைவ உணவகம் என்று தனித்தனியாகப் பிரித்திருக்கும் விதம் அற்புதம்.

போக்குவரத்து

முக்கிய விழாக்கள் நடைபெறும் நேரங்களில், போக்குவரத்துதானே மிகவும் முக்கியம்? செயலியில் போக்குவரத்துக்காகவும் தனிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துகளான ரயில், அரசுப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஆகியவற்றுக்கான வழித்தடமும், ரயில் பேருந்து பெயர்களும், எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தனிப் போக்குவரத்தை விரும்புவர்களுக்கு, கால்டாக்ஸி விவரங்கள் மற்றும் அவற்றின் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

தீர்த்த முன்பதிவு

விழாவில் கலந்து கொண்டால் போதுமா, தீர்த்தத்தைப் பெற வேண்டாமா என்பவர்களுக்காக, மகாமகம் விழா குறித்த சிறப்பு அரசு இணைய தளங்களின் முகவரியோடு, மகாமக தீர்த்தத்தை பெறுவதற்கான முன்பதிவு இணைப்பும் இங்கே காணப்படுகிறது.

கோயில்களின் புகைப்படங்களும், படத்தொகுப்புகளுக்கான இடுகைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. நகர வரைபடம் குறித்த கூகுள் மேப்புகளும், பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களும் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை மற்றும் வெளியேறும் பாதைகளின் இணைப்புகளும் இதில் அடங்கும்.

இப்போது ஆண்ட்ராய்ட் தளத்தில் மட்டுமே இயங்கும் செயலியை, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் தளத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் ஆசிரியர் குழுவினர்.

செயலி வடிவமைப்பு அனைத்தும் கண்ணை உறுத்தாத வண்ணங்களில், தெளிவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையிலும், எளிதாய்ப் புரியும் விதத்திலும் இருப்பது கூடுதல் சிறப்பு.

மகாமகம் செயலிக்கான ப்ளே ஸ்டோர் இணைப்பு: >http://bit.ly/1Q4KYG2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x