Published : 20 Oct 2014 12:04 PM
Last Updated : 20 Oct 2014 12:04 PM

தமிழகம் முழுவதும் 10 இடங்களில் ஆம்னி பஸ்களில் சிறப்புக் குழு அதிகாரிகள் ஆய்வு: விதிமுறை மீறி இயங்கிய 15 பஸ்களுக்கு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் போக்குவரத்துத்துறை சிறப்புக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். விதி மீறி இயக்கப்பட்ட 15 பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்களின் பாதுகாப்பு அம்சங்கள், அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்காணிக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் 10 இடங்களில் மொத்தம் 600 ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில், விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 15 பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேட்ட போது போக்குவரத்து ஆணை யரக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதிக கட்டண வசூல், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய 13 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆர்டீஓ, 2 வாகன ஆய்வாளர்கள் என மொத்தம் 40 போக்குவரத்து அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் கடந்த 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, விருதுநகர், மதுரை, வேலூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேர்வு செய்யப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வாகன தகுதிச்சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து 600 ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தினோம்.

வழக்கத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆம்னி பஸ்களுக்கு பர்மிட்டை ஏன் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுகுறித்து சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 24794709-க்கு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x