Published : 19 Feb 2017 05:56 PM
Last Updated : 19 Feb 2017 05:56 PM

தமிழகப் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல: அன்புமணி

தமிழகத்தின் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல. அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ஜனநாயகப் படுகொலையுடன் பதவிக் காலத்தைத் தொடங்கியுள்ளது. தமிழக வரலாற்றில் மக்கள் நம்பிக்கையை ஒரு விழுக்காடு கூட பெறாத முதல் அரசு இதுவாகத்தான் இருக்கும். ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள், மோசமான கடந்த காலம் ஆகியவற்றைக் கொண்ட இந்த அரசை மக்கள் வெறுப்புணர்வுடன் தான் பார்க்கின்றனர்.

புதிய அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மாநில நலன் காக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலமே அதன் மீது படிந்துள்ள ஊழல் கறை, வெறுப்பு ஆகியவற்றை அகற்ற முடியும். எனவே, வழக்கமான ஆற்று மணல் கொள்ளை, ஊழல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் 8 மாதங்கள் ஆகியும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்தே ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது ஐயமின்றி தெளிவாகிறது.

மதுவில்லா தமிழகத்தை உருவாக்கப் போராடி வரும் பாமக 4 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி நாடுமுழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்றது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்ட நிலையில், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2700 மதுக்கடைகள் அடுத்த மாத இறுதிக்குள் அகற்றப்பட வேண்டும்.

அதற்கு முன்பாக சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் பலகைகள், அறிவிப்பு பலகைகள் ஆகியவை இந்த தீர்ப்பு வெளியிடப்பட்ட 15.12.2016 அன்றே அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை எந்த பலகையும் அகற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான எந்த ஆலோசனையும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழக அரசு அளிக்கும் மரியாதை இது தான்.

ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த அதிமுக அரசு, இதுவரை விற்பனை குறைவாக இருந்த 500 மதுக்கடைகளை மட்டுமே மூடியிருக்கிறது. அடுத்த கட்டமாக எத்தனை மதுக்கடைகள் எப்போது மூடப்படும்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் அரசுத் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

வாக்குறுதி அளித்த ஜெயலலிதாவும் மறைந்து விட்டார், வாக்குறுதியை மக்களும் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் அரசு இவ்வாறு செயல்படுகிறது. அதுமட்டுமின்றி மது ஆலை அதிபரான சசிகலாவின் வழிகாட்டுதலில் செயல்படும் அரசு என்பதால், மிடாஸ் ஆலையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ஆணையிட்டால் கூட ஆச்சரியப்பட முடியாது. காரணம் ஆட்சியாளர்களின் பின்னணி அப்படி.

இவை தவிர, தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புக்களை பறிக்கக் கூடிய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சிறப்பு சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தருதல், தமிழகத்தின் கடன் சுமையை குறைத்தல், தமிழகத்திலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறுவதைத் தடுத்து, புதிய முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் என தமிழகத்தின் வளர்ச்சிக்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுதல், வறட்சி நிவாரணம் பெறுதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொள்ளும் என்று புதிய முதல்வர் அறிவித்திருக்கிறார். தமிழக பிரச்சினைகள் அவருக்கு நினைவில் இருப்பதில் மகிழ்ச்சி.

தமிழகத்தின் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல. அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெறுதல் போன்ற தனிநபர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் செயல்களில் ஈடுபடாமல், தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

தமிழகத்தின் பெருந்தீமையாக மது உருவெடுத்துள்ள நிலையில், அதை ஒழிப்பது தான் அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ஆம் தேதியுடன் மூட உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அந்த கெடுவுக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்'' என அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x