Last Updated : 30 Sep, 2014 08:04 AM

 

Published : 30 Sep 2014 08:04 AM
Last Updated : 30 Sep 2014 08:04 AM

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த அதிமுக வியூகம்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரச்சினை இருக்காது என்று அதிமுக தலைமை கருதுவதால் இதுபற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்தது. தமிழகம் இதுவரை பார்த்திராத ஒரு புதிய அரசியல் நிலையை இந்த தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, குற்ற வழக்கில் ஒரு அரசியல்வாதி தண்டனை பெறும்பட்சத்தில், அந்த நபர் சிறைத் தண்டனையை அனுபவித்து முடித்தபிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவர் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இது அதிமுக விசுவாசிகளை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக போன்ற ஒரு பெரிய கட்சியின் தலைமை, நேரடியாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டால், தனது தொண்டர் பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்பதை அதிமுகவினர் உணர்ந்துள்ளனர்.

ஏனெனில், அதிமுக உருவான காலகட்டத்தில் இருந்தே தலைமையை மட்டுமே நம்பிய கட்சியாக அது திகழ்ந்து வருகிறது. தாய்க் கட்சியான திமுகவைப் போல் அதற்கு நீண்ட நெடிய வரலாறு கிடையாது. திமுகவைப் போல் சமூக சீர்திருத்த இயக்கம் சார்ந்த அமைப்பாகவும் அதிமுக எப்போதும் முன்னிறுத்தப் பட்டதில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்களை ஈர்க்கும் சக்தி, தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே, தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு போட்டியிட்டது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலான அணி, ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவும் அதிமுக தொண்டர்களின் மனதில் பதிந்துவிட்ட இரட்டை இலை சின்னத்தில் அல்லாமல் வேறு (சேவல்) சின்னத்தில்.

இந்த வெற்றி, எம்.ஜி.ஆருக்கு இருந்த அதே ஈர்ப்பு சக்தி, ஜெயலலிதாவுக்கும் இருந்ததைக் காட்டுவதாக அமைந்தது. லட்சோப லட்சம் கட்சித் தொண்டர்கள் சிதறி வேறு கட்சிகளுக்கு போகவிடாமல் தடுத்து மீண்டும் ஒரே கட்சியாக மாறவும், இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளவும் காரணமாக இருந்தது. பின்னர், ஜெயலலிதா தலைமையில் 3 முறை தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது வரலாறு.

ஜெயலலிதா என்னும் சக்தியை முன்வைத்து இயங்கும் இயக்கமாகவே அதிமுக உள்ளது. அத்தகைய தலைவர் நீண்ட நெடுங்காலம் நேரடியாக கட்சியுடன் தொடர்பின்றி இருப்பது இயக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடும் என்று அதிமுகவில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். அது தேமுதிக, பாஜக போன்ற கட்சிகளுக்கு சாதகமாகிவிடக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

எனவே, சட்டப்பேரவை தேர்தலை விரைவாக நடத்தி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரச்சினை இருக்காது. பதவியில் நீடிப்பது உறுதியாகிவிட்டால், அது கட்சிக்கும் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். அதற்குள் மேல்முறையீட்டு வழக்கில் தண்டனைக் காலம் குறைக்கப்பட நேர்ந்தால், தேர்தலில் போட்டியிட ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஜெயலலிதா காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என்று கருதுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அதிமுக கருதுகிறது. விரைவில் தேர்தல் நடத்துவதே அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்ற நோக்கத்தில் அதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பால் மக்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபம் ஏற்பட்டிருப்பதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதனால், சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா வழக்கின்போக்கை வைத்து, தேர்தலை எவ்வளவு சீக்கிரம் சந்திப்பது என்பது பற்றி கட்சி முடிவெடுக்கும் என்றும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x