Published : 31 Oct 2014 01:08 PM
Last Updated : 31 Oct 2014 01:08 PM

தமிழகத்தில் புதிய மது ஆலைகளை திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

மக்கள் நலனையும், தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மழை நிவாரணப் பணிகளையும், மக்கள் நலப் பணிகளையும் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, ஒரே ஒரு பணியை மட்டும் முழு ஆர்வத்துடன் செய்து வருகிறது. தமிழகத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் அரசு மதுக்கடைகளை திறந்து, குடி கெடுக்கும் மதுவை இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குவதே அம்மகத்தான பணியாகும். இதன் அடுத்தக் கட்டமாக புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 6800 மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 54 கோடி லிட்டர் மது வகைகளையும், 25 கோடி லிட்டர் பீர் வகைகளையும் அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் பெரிய மதுபானச் சந்தை என்ற அவப்பெயரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. தமிழகத்தின் மது தாகத்தைப் பூர்த்தி செய்ய 11 மது ஆலைகளும், 7 பீர் உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6 மது ஆலைகளும், 4 பீர் ஆலைகளும் கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்டவை ஆகும். தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து இந்த ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுவின் அளவு மாறுபடும்.

மது தயாரிப்பு ஆலைகளில் சென்னை வளசரவாக்கத்தை தலைமை அலுவலமாகக் கொண்ட மோகன் புரூவரிஸ் நிறுவனத்தின் மது ஆலையும், பீர் ஆலையும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக அண்மையில் மூடப்பட்டன. அதேபோல், கோவை மாவட்டம் மாவுத்தம்பதியில் செயல்பட்டுவந்த இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் மற்றும் ஒயின் நிறுவனம் என்ற பெயரிலான மது ஆலையும் இதே காரணத்திற்காக சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன. இரு மது ஆலைகளும், ஒரு பீர் ஆலையும் மூடப்பட்டதால், அவை தயாரித்து வந்த 31 மதுவகைகளும், 5 பீர் வகைகளும் இப்போது அரசு மதுக்கடைகளில் கிடைப்பதில்லை.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்ட போதும், காவிரி நீரை வழங்க கர்நாடகா மறுத்ததால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்ட போதும் பதறாத தமிழக அரசு, இப்போது இந்த மதுவகைகள் கிடைக்காததால் கவலைப்பட்டு கலங்கி நிற்கிறது. இதனால், மது விற்பனை எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இதே அளவிலான மது மற்றும் பீர் வகைகளை கூடுதலாக தயாரித்து வழங்கும்படி மற்ற மது ஆலைகளுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த மதுவகைகளை நிரந்தரமாக தயாரித்துத் தருவதற்கு வசதியாக தமிழகத்தில் புதிய மது ஆலைகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக சிலரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத் தக்கது.

கேரளத்தைப் பின்பற்றியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பல்வேறு தருணங்களில் அளித்த தீர்ப்பை மதித்தும் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளித்து மதுவை ஆறாக ஓட வகை செய்ய அரசே முயல்வது நல்லது அல்ல.

பொருளாதாரப் பிரச்சினைகளால் மது ஆலைகள் மூடப்பட்டிருந்தால், அதை தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இரு மது ஆலைகள் மூடப்பட்டதால் 17 விழுக்காடு மது உற்பத்தியும், ஒரு பீர் ஆலை மூடப்பட்டதால் 10% பீர் உற்பத்தியும் குறைந்துள்ள நிலையில் அதற்கு இணையாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்திருந்தால் அது பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருந்திருக்கும். அதைவிடுத்து, அதிக மதுவை உற்பத்தி செய்யும் வகையில் புதிய மது ஆலைகளைத் திறக்க அரசு அனுமதித்தால், அது தமிழகத்தை மிக வேகமாக அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எனவே, மக்களின் நலனையும், தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x