Published : 18 Apr 2015 09:24 AM
Last Updated : 18 Apr 2015 09:24 AM

தமிழகத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும்: ராஜீவ் பிரதாப் ரூடி கருத்து

தமிழகத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இளைஞர்களின் திறமை, ஆற்றலை மேம்படுத்த மத்திய திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 12 ஆயிரம் தொழிற்பயிற்சி மையங்கள் நேற்று (16-ம் தேதி) திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தமிழகத்தில் பாஜக அமைப்பு ரீதியாக பலம் பெற்றுள்ளது.

ராகுல் காந்தி விடுப்பில் சென்றது காங்கிரஸாருக்கே மகிழ்ச்சியை தந்திருக்கலாம்.

நிதிஷ்குமார், சரத் யாதவ், முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், தேவ கவுடா உள்ளிட்டோர் ஜனதா பரிவார் தொடங்கியுள்ளனர். எத்தனை பூஜ்ஜியங்களை கூட்டினாலும் பூஜ்ஜியம்தான் வரும். பிஹார், உத்தரப் பிரதேசத்தில் மக்களின் நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டனர்.

மக்களின் செல்வாக்கை பெறுவதற்கான கடைசி அஸ்திரமாக ஜனதா பரிவார் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். கூட்டணி குறித்து மாநில தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x