Published : 28 Jan 2015 02:56 PM
Last Updated : 28 Jan 2015 02:56 PM

தமிழகத்தில் இருக்கும் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இலங்கையில் தமிழர்களுக்கான மறுகுடியமர்த்தல் குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உள்ள அகதிகளை சொந்த நாட்டுக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் ஜனவரி 30-ம் தேதி இந்திய - இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படுவதாகவும், இதில் தமிழகத்தில் இருந்து மூத்த அதிகாரி பங்கேற்க வருமாறும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசின் இந்தக் கூட்டம், இலங்கை அகதிகளை தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல ஊக்குவிப்பதாக அமையும். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்னும் அகதிகளுக்கு சாதகமான சூழலில் இல்லை.

கடந்த 1983 ஜூலை 24-ம் தேதி முதல் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் நான்கு கட்டங்களாக தமிழகம் வந்தனர். 2013 முதல் ஒருவர்கூட வரவில்லை. வந்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசின் உதவியுடன் தங்களது சொந்த ஏற்பாட்டில் இலங்கைக்கு திரும்பிவிட்டனர். தற்போது 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் மட்டுமே உள்ளனர். இதில் 64,924 பேர் 107 அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர்.

சிறந்த வசிப்பிடம்

இலங்கை அகதிகளுக்கு தமிழகம் சிறந்த வசிப்பிடமாக உள்ளது. அவர்கள் கண்ணியத் துடனும் பாதுகாப்புடன் வாழ்கின்ற னர். கடந்த 2011-ம் ஆண்டு ஆளுநர் உரையில் அரசு அறிவித்தபடி, இலங்கை அகதிகளுக்கு குடும்பத் தலைவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கு மாதம் ரூ.750, 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.400 என்ற வீதத்தில் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையின்றி 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் எண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் பொது வினியோகத் திட்டத்தில் வாங்கலாம். 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.

சமூகப் பாதுகாப்பு

பள்ளி மாணவர்களுக்கு சீருடை, மதிய உணவு, சைக்கிள், பஸ் பாஸ், லேப் டாப், பாடப் புத்தகங்கள், எழுது புத்தகங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், வண்ணப் பென்சில் என அனைத்தும் விலையின்றி வழங்கப்படுகிறது. அகதிகள் குடும்பத்து மாணவர்கள் தொழிற்கல்வி, அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் அவர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இன்னும் இலங்கை ராணுவம் பணியில் இருப்பதால் தொடர்ந்து அச்சம் நிலவுகிறது. உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்கள், இன்னும் முகாம்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மறுகுடி யமர்த்தல் தொடர்பாக அவர்களுக்கு சாதகமான எந்த நடவடிக்கையும் புதிய அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி மேற்கொண்டால் மட்டுமே அது வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் இலங்கை அரசின் சாதகமான அணுகு முறையை எதிர்பார்க்கின்ற னர். அங்கு உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களை மறுகுடிய மர்த்தல் செய்துவிட்டு, பிறகு தமிழகத்தில் உள்ள அகதிகளை அங்கு குடியமர்த்தலாம். இலங்கை யில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் மற்றும் சுயஅதிகாரம் வேண்டும். அவர்கள் நாட்டில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு மீண்டும் அவமானப் படுத்தப்படக் கூடாது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, அகதிகள் தங்கள் விருப்பப்படி சொந்த நாட்டுக்குத் திரும்பி செல்ல நம்பிக்கை ஏற்படும்.

இலங்கையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வது குறித்து பரிசீலனை செய்யலாம். தற்போது இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தவிருப்பது மிகவும் முன்கூட்டிய செயல் என்பதால், இந்த ஆலோசனையை தள்ளி வைக்கலாம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x