Published : 23 Sep 2014 12:57 PM
Last Updated : 23 Sep 2014 12:57 PM

தமிழகத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு: ராமதாஸ் யோசனை

தமிழகத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாக்க, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை சாதி வாரியாக ஆதாரப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் 2 வாரங்களில் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்ததால் அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றிருந்தது. ஆனால், அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்டங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு தமிழக இடஒதுக்கீட்டுச் சட்டமும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலை உருவானது.

இத்தகைய சூழலில் கடந்த 13.07.2010 அன்று 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. எனினும், ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை மறுநிர்ணயம் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

அப்போதே உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதித்து தமிழகத்தில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்படி முந்தைய முதலமைச்சர் கலைஞரிடம் நேரிலும், இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கடிதம் மூலமாகவும் பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்தின் யோசனையை நம்பி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறுத்தார். தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவோ பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜனார்த்தனம் அளித்த நிரூபிக்க முடியாத புள்ளிவிவரங்களை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தொடரும் என 2011 ஆம் ஆண்டு ஆணையிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் அறிவுரைக்கு எதிரான இந்த தவறான அணுகுமுறை காரணமாகவே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை சாதி வாரியாக ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யும்போது தான் அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். இதை செய்து இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதை விடுத்து, தகுதியில்லாத அறிவுரைகளை நம்பி தமிழக அரசு நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது.

69% இட ஒதுக்கீடு என்பது தமிழக மக்களின் உரிமை ஆகும். தவறான செயல்பாடுகளால் அதை பறிகொடுத்து விடக் கூடாது. ஒருவேளை 69% இடஒதுக்கீட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவர் ஜனார்த்தனமும் தான் பொறுப்பேற்கவேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தவறான வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை விடுத்து, உச்சநீதிமன்ற அறிவுரையை மதித்து தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதன் அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைக்கும் வகையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x