Published : 24 Apr 2015 07:41 PM
Last Updated : 24 Apr 2015 07:41 PM

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி

தமிழகத்தில் உள்ள 1,567 காவல் நிலையங்களிலும் ஐந்து ஆண்டு களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று காவல்துறை நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ், ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் ‘பாடம்’ நாராயணன் ஆகிய இருவரும் உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில், “விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல் லப்படுபவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகின்றனர். இதில் சிலர் இறக்கவும் செய்கின்றனர்.

இதுபோன்று சம்பவங்களை தடுக்க காவல் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய கண்காணிப்பு கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் கேள்வி

இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “1,567 காவல் நிலையங்களில் தற்போதுதான் 251 காவல் நிலை யங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 6-ல் ஒரு பங்கு ஆகும். இதற்கே மூன்று ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று மீதமுள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறை வடைய 18 ஆண்டுகள் ஆகுமா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

டிஜிபி சார்பில் மனு தாக்கல்

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, காவல்துறை டிஜிபி சார்பில் ஐ.ஜி (நிர்வாகம்) டேவிட். தேவாசீர்வாதம் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், “முதல் பகுதியாக 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது புதிய திட்டம் என்பதால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

தவிர, போலீஸ் படையை நவீனப் படுத்துவதற்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. இருந்தாலும் கிடைக்கும் நிதியை வைத்து தமிழக அரசு அந்தப் பணியை சிறப்பாக செய்து வருகிறது.

மீதமுள்ள காவல் நிலையங் களில் ஆண்டுக்கு 263 காவல் நிலையங்கள் வீதம் ரூ. 6.3 கோடி செலவில் ஐந்து ஆண்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் உத்தரவு

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், “காவல் துறையை நவீனப் படுத்துவதற்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத் திருப்பது ஆச்சர்யமாக உள் ளது.

நவீனமயமாக்கல் என்பது இன்று அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றங்களை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறை நவீனமயமாக்கல் செய்யப்பட வேண்டும் எனினும், காவல்துறை ஐ.ஜி தாக்கல் செய்துள்ள பதில் மனு திருப்தியளிப்பதால் இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x