Published : 30 Nov 2015 09:07 PM
Last Updated : 30 Nov 2015 09:07 PM

தமிழகத்தில் 8 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் தொடர்ந்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கடலோர மாவட்டங்களில் கனமழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் பல மாவட்டங் களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலைகொண்டிருந்தன. இவற்றின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை அருகில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. ஆனால், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கிறது. இது மிகவும் மெதுவாக நகர்ந்து இலங்கை அருகில் சென்று தொடர்ந்து அரபிக்கடல் பகுதியில் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குடவாசலில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. மரக்காணத்தில் 10, வானூர், திருபுவனம், விழுப்புரம், மணமேல்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழையும், உள்மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்பிறகு 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர் படிப்படியாக மழை குறையலாம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்யலாம். தற்போது வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாகவோ மண்டலமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால், வடதமிழக பகுதிகளில் 3 நாட்களுக்கு அதிகளவு மழை கிடைக்கும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை 52 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 114 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு ரமணன் கூறினார்.

5 நாட்களுக்கு கனமழை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 8 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முதல் 5 நாளில் பரவலாக கனமழையும், அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யும். அதன்பின் மழை குறையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 6.4 மி.மீ,, மீனம்பாக்கத்தில் 11 மி.மீ. மழை பதிவாகியது. விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மிக அதிகமான மழை பதிவாகியிருந்தது.

துல்லிய கணிப்பு

வங்கக்கடல் பகுதியில் ஏற்படும் வானிலை நிகழ்வுகள் அடிப்படையில் அதன்போக்கை அறிந்து மழை பெய்யும் பகுதிகளை வானிலை ஆய்வு மையம் கணிக்கிறது. சில நேரங்களில் இந்த கணிப்புகள் இயற்கையின் திடீர் மாற்றங்களால் தவறி விடுவதுண்டு.

பொதுவாக, பூகோள அமைப்பு வெப்ப மண்டலப் பகுதிகள், புற வெப்பமண்டலப் பகுதிகள் என பிரிக்கப்படுகிறது. இதில், புற வெப்பமண்டல பகுதிகளில் நிலவும் மாற்றங்களை கணினி துல்லியமாக கணிப்பதாக கூறப்படுகிறது. வெப்பமண்டல பகுதியில் தமிழகம் வருவதால், துல்லிய கணிப்புகள் வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நீங்கலாக மற்ற 5 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் கனேசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x