Published : 31 Mar 2015 10:04 AM
Last Updated : 31 Mar 2015 10:04 AM

தமிழக முதல்வருடன் சீன தூதர் சந்திப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தை நேற்று சந்தித்துப் பேசிய சீன தூதர், சீனாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவுக்கான சீன தூதர் லீ யூஜெங் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் சி.வி.சங்கர், நிதித் துறை முதன்மைச் செயலர் கே.சண்முகம், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா சீனா இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கலாச்சார, வர்த்தக தொடர்புகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார். தமிழகத்தில் 6 சீன நிறுவனங்கள் இயங்கிவருவதை குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து தமிழகம் நிதிஉதவி பெற முடியும் என்பதையும் தெரிவித்தார்.

தமிழக அரசு சென்னையில் மே 23, 24-ம் தேதிகளில் நடத்த உத்தேசித்துள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் சீன தொழிலதிபர்கள் பங்கேற்குமாறு அந்நாட்டு தூதரிடம் முதல்வர் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் மாநில அளவில் உறவுகளை மேலும் பலப்படுத்த விரும்புவதாக தெரிவித்த சீன தூதர், இதுதொடர்பாக சீன மாகாண தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த சீனாவுக்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.

இத்தகவலை தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x