Last Updated : 31 Oct, 2014 08:20 AM

 

Published : 31 Oct 2014 08:20 AM
Last Updated : 31 Oct 2014 08:20 AM

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை: இலங்கை உயர் நீதிமன்ற தீர்ப்பால் ராமேசுவரத்தில் பதற்றம்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது, இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை உணர்ந்த தமிழக அரசு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் 5 மீனவர்களுக்கான வழக்கை நடத்தி வந்தது. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத் தில் மீனவர்கள் மேல்முறையீடு செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனில் சில்வா, ஷராஃபி மொஹிதீன், காந்த் ஆகியோர் கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் பதற்றம்

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த தகவல் வெளியானதும் ராமேசுவரம் மீனவர்கள் கொதிப்படைந்தனர். ஆண்கள், பெண்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் பாம்பன்-தங்கச்சிமடம் இடையே சாலைகளில் நேற்று மாலை 4 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தண்டவாளங்கள் தகர்ப்பு

கூட்டம் சேர, சேர பலரும் ஆத்திரமடைந்தனர். தங்கச்சிமடம் அருகே ரயில்வே தண்டவாளத்தை தகர்த்தெடுத்தனர். இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் பல நூறு பேர் சேர்ந்து 2 மணி நேரத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாள கட்டைகளை வளைத்து சேதப்படுத்தினர்.

அப்போது, மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் அக்காள்மடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. கட்டைகள், மரங்களை சாலைகளில் போட்டு தடைகளை ஏற்படுத்தினர். லாரி டயர்களை சாலைகளில் போட்டு எரித்தனர். அடுத்தடுத்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததால், பசும்பொன்னில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் தங்கச்சிமடம் பகுதிக்கு விரைந்தனர். ஆனாலும், மீனவர் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கும்வரை மறியல் தொடரும் என மீனவர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனால் இப்பகுதியில் சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

4 ரயில்கள் ரத்து

ராமேசுவரத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்ட திருப்பதி விரைவு ரயில் போராட்டம் நடந்த பகுதியை கடந்தது. இதன் பின்னரே தங்கச்சிமடத்தில் தண்டவாளக் கட்டைகள் வளைத்து சேதப்படுத்தப்பட்டன. சில இடங்களில் தீ வைக்கப்பட்டன. இதையடுத்து மாலை 5 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய ராமேசுவரம் விரைவு ரயில், 6 மணிக்குப் புறப்படும் மதுரை பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு புறப்படும் சேது விரைவு ரயில், இரவு 8.45 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில் ஆகிய 4 ரயில்கள் வர வழியில்லாததால், இந்த ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் ராமேசுவரத்துக்கு நேற்றிரவு 7.30 மணிக்கு வந்து சேர வேண்டிய விரைவு ரயில் ஒன்று ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டது. இதேபோல் மதுரையிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு புறப் பட்ட பயணிகள் ரயில் இரவு 10 மணிக்கு ராமேசுவரம் சென்ற டைய வேண்டும். இந்த ரயிலும் ராமநாதபுரத்துடன் நிறுத் தப்பட்டது.

இந்த ரயில்களை எதிர்பார்த்து பரமக்குடி, ராமநாதபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். இதனால் நேற்று மானா மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிலம்பு விரைவு ரயிலில் கடும் நெரிசல் காணப்பட்டது. நேற்று பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் குருபூஜை நடந்ததால் பல பகுதிகளுக்கு பகல் நேரத்திலும், பெரும்பாலான பகுதிகளில் இரவிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்தது. ரயில் ரத்தான நிலை யில், பேருந்துகளும் இயங்காத தால் பயணிகள் கடும் அவதிக் குள்ளாயினர். இந்த நிலையில் ஆன்லைனில் பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பியனுப்பப்பட்டது. மேலும் சில ரயில்களின் நேரங்களை மாற்றி தெற்கு ரயில்வே அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x