Published : 24 Oct 2014 05:58 PM
Last Updated : 24 Oct 2014 05:58 PM

தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துக: தேமுதிக வலியுறுத்தல்

மழை நீரை வீணாக்காமல் இருக்க, தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தேமுதிக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தும், இனிவரும் காலங்களில் தேமுதிக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

குன்ஹாவுக்கு பாராட்டு

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிகப் பெரிய பதவி வகித்தாலும், அவர் செய்தது குற்றமே எனத் தீர்ப்பளித்து, ஊழல் குற்றம் என்பது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை உருவாக்கும், மனித உரிமையை மீறிய செயல் என கூறி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவுக்கு பாராட்டுக்களை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளையில், நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும், நீதிமன்றத்தையும் தரம்தாழ்ந்து மிக மோசமாக விமர்சனம் செய்தவர்களையும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களையும் தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுப்போய் உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவை நடக்காத நாளே இல்லை. காவலரை, காவலரே கொலை செய்வதும், காவல் நிலையத்திலேயே சுட்டுக்கொல்வதும் என மோசமான நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

சகாயத்துக்கு ஒத்துழைப்பு தேவை

கிரானைட் குவாரி, மணல் குவாரி, கடற்கரை தாது மணல் குவாரி போன்றவற்றில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், விசாரணை நடத்துவதற்குரிய ஒத்துழைப்பை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றால் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று சகாயத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இனியும் இப்பிரச்சனையில் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை நிவாரணப் பணிகள்

கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால் சென்னை மாநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்வுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அதை உடனடியாக களையும் வகையில் சாலைகளையும், மழை நீர் கால்வாய்களையும் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, சென்னை மாநகர மக்களும், தமிழகத்தின் பிற இடங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்ப வழி ஏற்படுத்திட வேண்டும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் பல மாவட்டங்களில் கடும் மழையால் விவசாய பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.

ஜெயலலிதா படங்களை நீக்குக

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட உடனே முதலமைச்சர் பதவியையும், அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் இழந்துவிட்டார். ஆனால், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களிலும், அரசுத்துறையின் அனைத்து அலுவலகங்களிலும், விளம்பரங்களிலும் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னும் ஜெயலலிதாவின் படங்களே இடம் பெற்றுள்ளன. இதைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

நோக்கியா ஆலை பிரச்சினை

தமிழக அரசின் நிர்வாகதிறமை சரிவர இல்லாதததால் தமிழகத்திற்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டன. பல ஆயிரம் குடும்பத்திற்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திய நோக்கியா தொழிற்சாலை மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனே இப்பிரச்சனையில் தலையிட்டு தொழிற்சாலையை இயக்கவும் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ வழி செய்திட வேண்டும்.

தமிழக நதிகள் இணைப்புத் திட்டம்

பலத்த மழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டபோதிலும், பல மாவட்டங்களில் எரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் நிரம்பாமல் கடலில் வீணாக கலக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் தூர் வாராததாலும், பராமரிப்பு பணிகளை முறையே செய்யாமல் இருப்பதுமேயாகும். எனவே இவற்றை உரிய முறையில் பராமரிப்பதுடன், தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

செயலிழந்த அரசு

முதலமைச்சரிலிருந்து அனைத்து துறை அமைச்சர்கள் வரை அனைவரும் எவ்வித செயல் பாடும் இன்றி உள்ளனர். தமிழகத்தில் இந்த நிலை மாறி முடங்கி கிடக்கும் திட்டங்களையும், செயல்படாமல் உள்ள பணிகளையும் முடுக்கி விட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனத்தை செலுத்தி இந்த அரசு செயல்பட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x