Last Updated : 28 Jun, 2016 08:53 AM

 

Published : 28 Jun 2016 08:53 AM
Last Updated : 28 Jun 2016 08:53 AM

தமிழக காங். தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமிக்க கோரிக்கை: சோனியாவை சந்திக்க மாவட்டத் தலைவர்கள் நாளை டெல்லி பயணம்

தமிழக காங்கிரஸ் தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமிக்குமாறு சோனியா காந்தியிடம் நேரில் வலியுறுத்து வதற்காக இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டி யிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதாக இளங்கோவனிடம் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் தேசியச் செயலாளர்கள் சு.திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், மாணிக் தாகூர், ஜே.எம்.ஆரூண், முன்னாள் மத்திய இணை அமைச் சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன், எம்எல்ஏக் கள் எச்.வசந்தகுமார், எஸ்.விஜயதரணி என 10-க்கும் அதிகமானோர் டெல்லியில் முகாமிட்டு தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், குலாம்நபி ஆசாத், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரிடம் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் செல்வாக்கான சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்க சோனியா விரும்புவதாக கூறப்படுகிறது. சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக தேவர் சமு தாயத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராமசாமி இருப்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூருக்கு எதிர்ப்பு எழுந் துள்ளது.

வெளிநாடு செல்லும் முன்பு பீட்டர் அல்போன் ஸிடம் ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால், அவருக்கு வாய்ப்பு அதிகம் என தகவல் வெளியாகி யுள்ளது. மாணவர் பருவம் முதல் காங்கிர ஸில் இருப்பவர். மாவட்டத் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், எம்பி, எம்எல்ஏ போன்ற பதவிகளை வகித்து அனுபவம் மிக்கவர் என்பதால் அவருக் கும் ஆதரவு இருக்கிறது. ஆனால், தமாகாவில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு வந்தவர் என்பது அவருக்கு பாதகமாக உள்ளது.

முன்னாள் அமைச்சரான திருநாவுக் கரசர் தனிக் கட்சி நடத்திய அனுபவம் மிக்கவர். 2009-ல் இருந்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் அவருக்கு மேலிடத் தலைவர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அதிமுக, பாஜகவில் இருந்து வந்தவர் என அவருக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், வசந்தகுமார் ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். ப.சிதம்பரம் தனது ஆதரவாளரான தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜனை தலைவராக்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பீட்டர் அல்போன்ஸை தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்தியிடம் நேரில் மனு கொடுக்க இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழக காங்கிரஸில் 61 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 45 பேர் இளங்கோவன் ஆதரவாளர்கள்.

இவர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக இளங்கோவனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இனி இளங்கோவனுக்கு வாய்ப்பில்லை என்பதால் பீட்டருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளனர். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சோனியாவிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி நாடு திரும்பியதும் தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x