Last Updated : 18 Apr, 2015 09:46 AM

 

Published : 18 Apr 2015 09:46 AM
Last Updated : 18 Apr 2015 09:46 AM

தனுஷ்கோடி சாலைப்பணியால் பாதிப்பு அபாயம்: ராமேசுவரத்தில் குதிரைகள் சரணாலயம் அமைக்கப்படுமா?

தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணியால் ராமேசுவரம் தீவின் மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும் குதிரைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுதால் அங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம் தீவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை முதல் பாம்பன் குந்துக்கல் கடற்கரைப் பகுதி வரை நூற்றுக்கணக்கான அரிய வகை குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இக்குதிரைகள் ராமேசுவரத்துக்கு வந்து சேர்ந்த வரலாறு மிக சுவாரஸ்யமானது.

தமிழகம் மற்றும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் அரேபிய தீபகற் பத்தில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்துள்ளனர். அவற் றுக்கு போர் பயிற்சி வழங்கு வதற்காக வாணிபத்துக்காக வந்த அரேபியர்களை குதிரைப் படை தலைவர்களாக நியமித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்புடையார் கோயில் கோபுரத் தில் ராமேசுவரம் கடற்கரையில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கல கப்பலையும், குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியும் ஓவியமாக இடம் பெற்றுள்ளது.

ராமேசுவரம் குதிரைகள்

1988-க்கு முன்பு வரை ராமேசுவரம் தீவு ரயில் சேவையால் மட்டுமே இந்தியாவுடன் இணைந் திருந்தது. இதனால் உள்ளூர் போக்குவரத்துக்கு பொதுமக்கள் குதிரை வண்டிகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ராமநாத சுவாமி கோயில், தனுஷ்கோடி, ராமர் பாதம், அக்னி தீர்த்தம் ஆகிய இடங்களுக்கு குதிரைகள் பூட்டிய வண்டிகளையே சுற்றுலா வந்த பயணிகள் பயன்படுத்தினர். இந்நிலையில் 1988-ல் கடல் மீது அமைக்கப்பட்ட சாலைப்பாலத் தால் மோட்டார் வாகனப் போக்கு வரத்து அதிகரித்தது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர் களிடையே குதிரை வண்டி பயன் பாடு குறைந்தது.

வருமானம் இல்லாததால் குதிரைகளுக்கு தீவனம்போட முடி யாமல் தவித்த குதிரை உரிமை யாளர்கள், தனுஷ்கோடி முதல் பாம்பன் கடலோர பகுதிகளில் குதிரைகளை விட்டனர். இதனால் இப்பகுதிகளில் தற்போது நூற்றுக் கணக்கான அரிய வகை குதிரைகள் சுற்றித்திரிகின்றன.

ராமேசுவரம் தீவு என்பதால் குதிரைகள் வெளியிடங்களுக்கு இடம்பெயர முடியாது. ஆழிப்பேர லைக்குப்பிறகு தனுஷ்கோடி பகுதி மனிதர் வாழ தகுதியற்றது என்று அரசு அறிவித்தது. இதனால் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதி குதிரைகளின் புகலிட மாக மாறியது. 1988-க்குப் பின்னர் தனித்துவிடப்பட்ட குதிரைகள் விருத்தியாகி இப்போது நூற்றுக் கணக்கில் சுற்றித்திரிகின்றன. இங்குள்ள மேய்ச்சல் பகுதி, நீர் அருந்தும் நிலைகள் ஆகியவை அவைகளுக்கு தோதாக அமைந் தன.

புதிய சாலை அமைக்கும் பணி

இந்நிலையில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வசதிக்காக 50 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ராமேசுவரத்தில் இருந்து தனுஷ் கோடிக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் குதிரைகளின் தற்போதைய வாழ் விடங்களாக கருதப்படும் பகுதிகள் சாலைகளாக உருமாறும். குதிரை களின் வாழ்விடச் சூழல் சீர்கெடும். இரை, நீர் உள்ளிட்டவை கிடைக் காமலோ, வாகனப்போக்கு வரத்தின் நெருக்கடிகளினாலோ அவை பாதிக்கப்படும்.

இதனாலேயே குதிரைகளை பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர். குதிரைகளின் கணக்கெடுப்பு நடத்தி போக்கிடம் இல்லாமல் தவிக்கும் அவை களுக்கு தனி சரணாலயம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறும்போது, ‘சாலை அமைப்பதால் ராமேசுவரம் தீவின் மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும் குதிரைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகி யுள்ளது. குதிரைகளை பாதுகாக்க தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஓரிடத்தில் குதிரைகள் சரணாலயம் அமைக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x