Published : 26 Apr 2015 11:24 AM
Last Updated : 26 Apr 2015 11:24 AM

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மே 17-ம் தேதி பிரியதர்ஷினியின் பெற்றோருக்கு கல்லூரியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பிரியதர்ஷினி தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரியதர்ஷி னியின் தாய் கயல்விழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றி கடந்த 2012, ஜூன் 8-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கயல்விழி உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி உத்தரவு

இவ்வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பிரியதர்ஷினி மரணம் தொடர்பான வழக்கு வில்லி யனூர் துணை மண்டல மாஜிஸ்திரேட் விசாரணையில் உள்ளது. இதுகுறித்த பல விளக்கங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் மாஜிஸ் திரேட் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய பதில் கிடைக் கவில்லை. பிரியதர்ஷினிக்கு நெருக்கமாக இருந்த பிரதீப் என்ற மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. மேலும், வழக்கை முடித்து வைக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

இதில் இருந்தே மாநில போலீஸார் சரியான விசாரணை நடத்த தவறியது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து புதுச்சேரி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் சிபிசிஐடி போலீஸார் பிரதீப்பிடம் தேர்வில் கேள்வி கேட்பது போல் கேள்வி கேட்டு பதில் எழுதுமாறு கூறியுள்ளனர். அத்துடன், போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில் எந்த அதிகாரி விசாரணை நடத்தினார் என்று கூட குறிப்பிடப்படவில்லை.

இதைத் தவிர, பிரியதர்ஷினி யின் லேப்டாப்பில் இருந்து பல சாட்சியங்களை பிரதீப்பின் உறவினர்கள் அழித்துள்ளனர். இதுகுறித்தும், சிபிசிஐடி உரிய விசாரணை நடத்தவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி ஒழுங்காக விசாரிக்கவில்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. அதனால், இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது.

உரிய நடவடிக்கை தேவை

மேலும், விசாரணையின் போது சாட்சியங்களை மறைத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி போலீஸார் மற்றும் சிபிசிஐடி போலீஸார் செயல்பட்டிருப்பதால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x