Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

தந்தை 2-வது திருமணம் செய்ததால் பள்ளியில் மாணவி தற்கொலை?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கழிப்பறையில் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டார். தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அந்த மாணவி இந்த முடிவை எடுத்ததாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:

பேரணாம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். திங்கள்கிழமை காலை உள்ளே தாழிடப்பட்ட கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. கதவில் இருந்த துவாரம் வழியாக பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியுடன் கூச்சலிட்டபடி ஓடிவந்தனர்.

இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர். யாரோ தீ குளித்திருப்பதை உணர்ந்த ஆசிரியர்கள், பேரணாம்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து சென்ற போலீஸார் கழிப்பறைக்குள் தீ குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவி ஹரிணியை மீட்டனர். உடனடியாக அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

இறந்த ஹரிணி பேரணாம்பட்டு பாகர் சாஹிப் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் கண்ணபிரான் என்பவரின் மகள். ஆறாம் வகுப்பு மாணவி. கண்ணபிரானுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மஞ்சுளாவின் மகள் ஹரிணி. உடல் நலக்குறைவால் மஞ்சுளா இறந்துவிட்டதால், சில மாதங்களுக்கு முன்பு சித்ரா என்பவரை கண்ணபிரான் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் ஹரிணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது சித்தி கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். திருப்பத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

பேரணாம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆயிஷா பேகம் கூறும்போது, ‘‘சிறுமி ஹரிணி ஆங்கிலவழிக் கல்வி படித்துவந்தார். தவறாமல் பள்ளிக்கு வருவார். படிப்பில் எந்த குறையும் இல்லை. பள்ளி மற்றும் வகுப்பில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

11 வயது சிறுமிக்கு தற்கொலை எண்ணம் வந்தது ஏன்?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மகளிர் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணி (11), திங்கள்கிழமை காலை பள்ளியில் கழிவறைக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தற்கொலை எண்ணம் வருவதற்கான காரணம் பற்றி கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் சத்தியநாதன் கூறியதாவது:

வளர்ந்துவரும் நவீன தகவல் தொழில்நுட்பம், சினிமா, டிவி போன்றவற்றை பார்க்கும்போது தற்கொலை செய்து கொள்வதற்கு வயது வித்தியாசம் தேவையில்லை. இதனுடைய தாக்கமே சிறுவர், சிறுமிகள் தற்கொலையை தூண்டுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிகூட, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். பள்ளி மாணவி, வீட்டில் தற்கொலை செய்து கொள்ளாமல் பள்ளியில் வந்து யாருக்கும் தெரியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது, பள்ளியில் மாணவிக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்ததா என்பதை பார்க்க வேண்டும். பெற்றோர், குழந்தைகளிடம் அன்பாகவும், பாசமாகவும் பழக வேண்டும். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால், அதை உடனடியாக கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x