Last Updated : 22 Jun, 2017 04:18 PM

 

Published : 22 Jun 2017 04:18 PM
Last Updated : 22 Jun 2017 04:18 PM

டிஎஸ்பியிடம் அறை வாங்கிய ஈஸ்வரி; தாலியை கழற்றி தந்த வேலுமணி: சாமளாபுரத்து வீராங்கனைகளின் மதுக்கடை புரட்சி

கள்ளுக்கடைக்கு எதிராக கேரளாவின் வைக்கம் பகுதியில் போராட்டம் செய்ததால் அந்தக் காலத்தில் பெரியார் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். அடுத்தடுத்து மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதால் மதுக்கடைக்கு எதிரான புரட்சிப் பெண்கள் கொண்ட கிராமம் என்ற பெயரைப் பெற ஆரம்பித்துள்ளது திருப்பூர், சாமளாபுரம் பேரூராட்சி கிராமங்கள்.

இங்கு நடந்த மதுக்கடை அகற்றும் போராட்டத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி காவல்துறை நடத்திய தடியடி நிகழ்வில் டிஎஸ்பி அறைந்ததால் ஈஸ்வரி என்ற பெண் பாதிக்கப்பட்டார். அது வீடியோ பதிவாகி நாடு முழுக்க வலம் வந்த நிலையில் மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையத்தின் கண்டனத்திற்கும், விசாரணைக்கும் உள்ளானது. அதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய மதுக்கடையை மூடினர் அதிகாரிகள். பேரூராட்சிக்குள் வேறு இடத்திலும் மதுக்கடை திறக்க மாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தனர்.

அந்த உத்தரவாதத்தை மீறி 2 வாரங்களுக்கு முன் அகற்றிய மதுக்கடையிலிருந்து சுமார் 1 மைல்தூரத்தில் காளிபாளையம் என்ற பகுதியில் புதிய மதுக்கடை திறந்தனர் அதிகாரிகள். அதேநேரம் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்த டிஎஸ்பிக்கு பணிமாறுதலுடன் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. அதில் ஆவேசமான பெண்கள் இதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். போராட்டம் ஒரு வாரம் கடந்த நிலையில் சென்ற 12ம் தேதி போராட்டப் பெண்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, கிருஷ்ணம்மாள் என்கிற 75 வயது பெண்மணி மயங்கி விழுந்தார். அவருக்கு மூர்ச்சை தெளிவித்து மருத்துவமனைக்கு கொண்டு போக முயற்சித்தவர்களை தடுத்தார். 'என்னை காப்பாத்தாதீங்க. பிராந்திக் கடை இருப்பதற்கு நான் இறப்பதே மேல்!' என்று சொல்லி, அழுது கரைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் மற்றவர்களுக்கு ஒரு வழி ஆகி விட்டது.

(வேலுமணி)

அதே நாள் மாலை. வேலுமணி என்ற பெண் தன் கழுத்திலிருந்து தாலியை கழற்றி அதிகாரிகள் கையில் கொடுத்துவிட்டார். 'குடிச்சுக் குடிச்சு என் புருஷன் என்ன ஆவாரோன்னு கவலையோடே இந்தத் தாலி என் கழுத்துல தொங்கிறதுக்கு பதிலா இதை நீங்களே வச்சுக்குங்க!' என்று உணர்ச்சி பொங்கி ஆவேசமாக அவர் பேச, அதிகாரி அதிர்ந்து போய்விட்டார். கூடியிருந்த சில பெண்களும் தன் தாலி கழற்சி வீச தயாராக வெல வெலத்துப் போன அதிகாரி உடனே டாஸ்மாக் மதுபானக் கடையை மூடுவதாக உத்தரவாதம் தந்ததோடு, அடுத்த நாளே பூட்டி சீல் வைத்து விட்டனர்.

இனி சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் எங்கே மதுக்கடை திறந்தாலும் எதிர்ப்போம் என்று சூளுரைத்து காத்திருக்கின்றனர் பெண்கள். ஆனால், மதுக்கடை பூட்டப்பட்ட நாளே ஆண்கள் ஒரு சிலர், 'மது குடிக்க, நாங்கள் 15 கிலோமீட்டர் தூரம் பஸ்ஸில் போய் வர வேண்டியிருக்கு. இந்த ஊரிலேயே மதுக்கடை வேண்டும்!' என்று போராட்டத்தில் இறங்கினர். இந்த சூழ்நிலையில் என்னதான் நடக்கிறது சாமளாபுரம் மதுக்கடை விவகாரத்தில். அந்த கிராமத்திற்கே சென்றோம்.

( சாமளாபுரம் காளிபாளையத்தில் பூட்டிப்பட்டிருக்கும் மதுக்கடை)

கோவையிலிருந்து சோமனூர் வழியாக திருப்பூர் செல்லும் பாதையில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமம் அய்யம்பாளையம், பரமசம்பாளையம், பள்ளபாளையம், காளிபாளையம் என பல்வேறு ஊர்கள் அடங்கிய 15 வார்டுகள் உள்ளன. இங்கு எங்கே திரும்பினாலும் இந்த மதுக்கடை பற்றிய பேச்சாகவே இருந்தது.

அதிலும் சமீபத்தில் பூட்டி சீலிடப்பட்ட மதுக்கடை முன்பு நிமிஷத்துக்கு 10 பேராவது இருசக்கர வாகனத்தில், சைக்கிளில் வருவதும், கடை இல்லையா? என்று கேட்டுவிட்டு புலம்பிச் செல்வதையும் காணமுடிந்தது.

'ஏற்கெனவே இந்த பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் 2 மதுக்கடைகள் இருந்தது. அதில் ஒரு கடை மதுக்கடைகள் குறைப்பு நடவடிக்கையில் அகற்றப்பட்டது. இன்னொரு கடை பள்ளபாளையம் பகுதியில் இருந்துச்சு. அதை அகற்ற சொல்லியே முதலில் போராட்டம் செஞ்சாங்க. அதை எடுத்துத்தான் ஒரு மைல் தூரத்தில் இந்த இடத்திற்கு மாத்தினாங்க. இப்ப இங்கேயும் பிரச்சினை. மூடிட்டாங்க. சுற்றி உள்ள நாலஞ்சு ஊர்காரங்க வேலைக்கு, தறிகுடோன், கோழிப்பண்ணை, பள்ளிக்கூடம்னு போறது வர்றது எல்லாமே இந்த வழிதான். அதுதான் எதிர்க்கறாங்க. அதுக்காக 15 கிலோமீட்டர் தள்ளி பஸ்ல போய்த்தான் குடிக்கோணும்னா ஆகற வேலைங்களா, சொல்லுங்க!' என்றனர் அவர்கள்.

(கிருஷ்ணம்மாள்)

உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரி போக மறுத்த கிருஷ்ணம்மாளை சந்தித்தோம். 'எனக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைக. எம் புருஷன் சதா குடிதான். குடிச்சா பேசற வார்த்தைகளை கேட்க முடியாது. நான் வீட்டுக்கு வெளியே வந்து படுத்துக்குவேன். பக்கத்து வீட்டுக்காரங்க பேசினாலும் அவங்க கூட சண்டை. எத்தனை நாளைக்கு இந்த ஆளு கூட பொழப்புன்னு செத்துப் போலாம்னு பலதடவை நினைச்சிருக்கேன். ஆனா 2 புள்ளைகளை காப்பாத்தணுமே. அதுகளை படிக்க வைக்கக்கூட முடியலை. தறி ஓட்ட போச்சு. அதுக காசையே மிச்சம் பண்ணி கண்ணாலம் கட்டி வச்சேன். இந்த மனுசன் சம்பாதிச்சு எதுவும் கொடுத்ததில்லை. நான் காட்டு வேலைக்கு போய் நூறு, நூத்தம்பது சம்பாதிச்சாத்தான் சோறு.

அதுலயே ஆயிரம் ரூபா வாடகை கொடுக்கணும். என் வயசுக்கு தாங்குமாங்க. கொஞ்ச நாள் பிராந்திக் கடை மூடியிருந்தப்ப கொஞ்சம் ஒழுங்காயிருந்தார். இப்ப கடை திறந்ததும் 24 மணி நேரமும் தண்ணிதான். என்னதான் செய்றது? அதுதான் வாரம் பூரா நடந்த போராட்டத்துக்கு போனேன். அன்னைக்கு சோறு தண்ணியில்லையா? வயசும் 75 ஆச்சா. அதுதான் மயக்கம் போட்டுட்டேன். அதைக்கூட நல்லா நடிக்கிறேன்னாங்க. எத்தனை காசு, யாரு கொடுத்தாங்கன்னு கேலி பேசறாங்க. ஏஞ்சாமி என் வயசுக்கு என் உருவத்தை பார்த்தா நடிக்கிற மாதிரியா இருக்கு? பேசாம அப்பவே அவங்க உட்டிருந்தா செத்துப்போயிருப்பேன்!' என்றார் கண்ணீருடன். அவர் குடிகார புருஷனுடன் படும் அவஸ்தையை அவர் பக்கத்து வீட்டுப் பெண்களும் வந்து சொன்னது உருக்கத்தின் உச்சம்.

இதையடுத்து தாலியை கழற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கையில் கொடுத்த வேலுமணியை சந்தித்தோம். 'எம் புருஷன் எலக்ட்ரீசியன். தறி குடோன்ல தாரோட்டற கூலிக்குப் போறேன். கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆச்சு. 26 சென்ட் இடம் வாங்கி ரூ.3லட்சம் போட்டு வீடுகட்டி நல்லாத்தான் இருந்தோம். ஒரே பொண்ணு. 9வது படிக்குது. 11 வருஷத்துல சேரக் கூடாதவங்க கூட சேர்ந்து குடிச்சுப் பழகிட்டார். சம்பாதிக்கிற காசு ஊட்டுக்கு வர்றதில்லை. பல தடவை பிராந்திக்கடைகளா தேடித்தான் மனுஷனை தூக்கிட்டு வரவேண்டியிருக்கும். அப்படி தேடும்போதெல்லாம் அவருக்கு என்ன ஆச்சோன்னு நானும் எம் பொண்ணும் தவியா தவிப்போம்.

இடையில போராட்டம் செஞ்சு கடைய மூடின பின்னாடி 2 மாசமா அவர் குடிக்கலை. 2 வாரமா மறுபடி கடை திறந்ததும் 2 மாசத்து சரக்கையும் சேர்த்து வச்சு குடிக்கிறார். திரும்பவும் ஆள் விட்டு தூக்கிட்டு வரவேண்டியதாச்சு. சம்பாதிச்சு காசும் வீடு வரலை. புள்ளைக்கு இன்னமும் ஸ்கூல் பீஸ் கட்டலை. அதுதான் ஊருக்குள்ளே மதுக்கடை போராட்டம்னதும் புறப்பட்டு போனேன். அதிகாரிகள் என்னடான்னா பேச்சுவார்த்தை நடத்திட்டு, கடை மாத்தறது பரிசீலனையில் இருக்குன்னே ஒரு வாரம் ஓட்டிட்டு இருந்தாங்க. கடைசியா வேற இடம் கிடைக்கிற வரைக்கும் இங்குள்ள கடைய மூட முடியாதுன்னாங்க. அதுதான் ஆக்ரோஷம் எனக்கு வந்துடுச்சு.

உடனே என் தாலியக் கழற்றி அவர் கையில் கொடுத்துட்டேன். உங்க மதுக்கடையால எங்க கழுத்துல நகைநட்டெல்லாம் ஒரு பொட்டு இல்லை. இந்த தாலி மட்டும்தான் மிஞ்சி இருக்கு. இது எதுக்கு ஊசாலாடிட்டு எங்க கழுத்துல தவிச்சுகிட்டு கிடக்கோணும். நீங்களே வச்சுக்குங்கன்னேன். அதிகாரியே பயந்துட்டார். அவர் தாலியக் கட்டும்மான்னு கெஞ்சறார். நான் முடியாதுங்கறேன். அப்ப அவரே அழுதுட்டார். அப்ப அங்கிருக்கிற பொம்பளைக எல்லாம் ஒப்பாரி வச்சு அழுக ஆரம்பிச்சுட்டாங்க. விடும்மா உடனே பூட்டிடறேன்னு அப்புறம்தான் சம்மதிச்சார். அவர் சொன்ன பின்னாடிதான் தாலிய வாங்கி நான் கட்டினேன்!' இதை சொல்லும்போதே வேலுமணிக்கு கண்களில் கண்ணீர் ததும்பியது.

எல்லாம் சரி. இந்த மதுக்கடைக்கு எதிராக நடந்த முதல்கட்டப்போராட்டத்தில் பங்கேற்று டிஎஸ்பியிடம் அறை வாங்கின அய்யம்பாளையம் ஈஸ்வரி எங்கே? அவர் கணவர் குடி அதிகமாகி, உடல்நிலை குன்றி கேரளா சிகிச்சைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார்கள் இப்பகுதி பெண்கள்.

என்றாலும் அய்யம்பாளையத்தில் உள்ள அவர் வீடு தேடிச் சென்றோம். அவர் இல்லை. பொள்ளாச்சி சென்றுவிட்டதாக சொன்னார் விசைத்தறி கூடத்தில் இருந்த அவரின் மகன். அவரிடம் பேசியபோது, 'அம்மா அடிபட்டதுல நாங்க படாதபாடு பட்டுட்டோம். அம்மா அதுக்கப்புறம் போராட்டத்துக்கே வரலை. நான்தான் போக வேண்டாம்னு சொல்லிட்டேன். எங்களுக்கு மொத்தம் 18 விசைத்தறிகள் சொந்தமா இருக்கு. நான் டிப்ளமோ படிச்சிருக்கேன். தம்பி பிபிஏ படிச்சிட்டிருக்கான். அப்பா அப்படியொன்றும் பெரிய குடிகாரர் இல்லை. அப்பப்ப எப்பவாவது குடிப்பார். போராட்டத்துக்கு எல்லோரும் போனாங்கன்னு அம்மாவும் போனார். அதுல ஒரு சம்பவம் நடந்துடுச்சு. அதைப் பத்தி அதிகாரிகள் விசாரிச்ச போது எல்லாம் சொல்லிட்டார். இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க!' என்றார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, 'போலீஸ் அதிகாரிக, கலெக்டருன்னு அந்த விவகாரம் பெரிய சமாச்சாரம் ஆகிப்போச்சா. எத்தனை பக்கம், யார், யார்கிட்ட விசாரணைக்கு போறதுன்னு பயந்துட்டாங்க. டிவியில வந்ததெல்லாம் ஒண்ணும் இல்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கலைன்னு ஒரேயடியா சொல்லிட்டு வந்துட்டாங்களாம். அதுதான் ஈஸ்வரியை அறைஞ்ச அதிகாரி மேல நடவடிக்கை எடுக்காம பதவி உயர்வு கொடுத்திருக்காங்க!' என்று வெள்ளந்தியாக பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x