Published : 25 May 2015 12:49 PM
Last Updated : 25 May 2015 12:49 PM

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக திமுக மேல்முறையீடு செய்யும்: கருணாநிதி அறிவிப்பு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக நிச்சயம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய மாவட்டச் செயலாளர் களின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான இக்கூட்டத்தில், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்குவது, தேர்தல் நிதி வசூல், மாவட்டந்தோறும் மக்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

"சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்வோம்" என்று கருணாநிதி ஏற்கெனவே கூறியிருந்தார்.

அதன்படி இன்றைய கூட்டத்தின்போது, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என கருணாநிதி அறிவித்தார்.

இது குறித்து கருணாநிதி பேசும்போது, "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் 11-5-2015 அன்று வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று, இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ரவி வர்மக் குமார் ஆகியோர், கர்நாடக அரசுக்கு தெளிவாகப் பரிந்துரை செய்துள்ளனர்.

குறிப்பாக ஆச்சார்யா, இந்த வழக்கில் கர்நாடக மாநில அரசு மேல் முறையீடு செய்யாவிட்டால், அது தவறான சட்ட முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றே அந்த அரசுக்கு ஆணித்தரமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கியமான ஊடகங்களும், சட்ட வல்லுநர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.

கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும், இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞரும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்களின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

தொடக்கத்தில் இந்த வழக்கினைத் தொடுத்த சுப்பிரமணியம் சுவாமியும் இந்த வழக்கிலே தானே மேல் முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்த வழக்கினில் பங்கேற்க திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உரிமை உண்டு என இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தால் திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலே உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மேல் முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x