Published : 28 Sep 2016 12:20 PM
Last Updated : 28 Sep 2016 12:20 PM

ஜெ. படம் பொறித்த காவடியுடன் தொண்டர் ஏற்படுத்திய பரபரப்பு: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சுவாரஸ்யம்

வேட்பு மனு தாக்கலின்போது கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்துக்கு ஜெயலலிதா மற்றும் அதிமுக கொடி பொறித்த படங்கள் ஒட்டப்பட்ட காவடியுடன் வந்து கட்சித் தொண்டர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கோவை மாநகராட்சி மாமன்றத்துக்கு மொத்தமுள்ள 100 வார்டுகளில் போட்டியிட அதிமுக தலைமையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு நேற்று மதியம் 12 மணி முதல் 1.00 மணி வரை மனுதாக்கல் நேரமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகங்கள், வங்கிகள், காவல்நிலையங்களில் பெறுவதில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை கடும் பதற்றத்திலும், பரபரப்பிலும் இருந்தனர்.

கோவை மாநகராட்சி கவுன்சிலர்களாக போட்டியிடுபவர்கள் 5 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் எங்கெல்லாம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், எந்தெந்த மண்டலங்களில் எந்தெந்த அலுவலர்களிடம் எந்தெந்த வார்டுகளை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்வது என்பது குறித்த விவரமும் பட்டியலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதில், 71 முதல் 86-வது வார்டு வரையிலான வேட்புமனுக்களை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உதவி ஆணையர் (நிர்வாகம்) ம.சுந்தரராஜன், கணக்கு அலுவலர் (சேமநல நிதி), கே.மாணிக்கம், குடிநீர் விநியோகப்பிரிவு உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இங்கே மனுதாக்கல் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

மதியம் 12.30 மணிக்கு துணை மேயர் லீலாவதி உண்ணி தனது ஆதரவாளர்களுடன் மனுதாக்கல் செய்ய வந்தார். அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் வந்தனர். அதற்கு முன்னதாகவே காவடியுடன் ஒருவர் வந்தார். அந்த காவடியில் முருகர், விநாயகர், ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களும், அவரது பனியனில் இரட்டை இலையும், கட்சிக் கொடியும் இருந்தது.

‘தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் நடத்தும் அலுவலகப் பகுதிக்கு இதுபோன்று வரக்கூடாது’ என்று கூறி, போலீஸார் அவரை விரட்டப் பார்த்தனர். ஆனால், அதற்கு அவர் இணங்கவில்லை. வாக்குவாதம் செய்தார். ‘நான் அம்மா நலம் பெற வேண்டி செல்வபுரத்திலிருந்து பாதயாத்திரையாக மருதமலைக்கு காவடியுடன் சென்று விட்டு, அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக இங்கே வந்துள்ளேன். எதிர்க் கட்சிக்காரங்க யாராவது காவடியுடன் வருவதை ஆட்சேபித்து வெளியே அனுப்ப சொன்னால் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு நீங்களே எப்படி என்னை விரட்டலாம்’ என்றெல்லாம் பேச ஆரம்பிக்கவும், போலீஸார் தவித்தனர். வேறு வழியில்லாமல் போலீஸார் அவரை விட்டுவிட்டனர்.

அவர் பெயர் காவடி சம்பத். கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர். ‘முதல்வர் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக காவடி எடுத்து மருதமலை போனேன். அதே நேரத்தில் இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் உள்ள அத்தனை உள்ளாட்சிகளிலும் வெற்றி வாகை சூடவேண்டும் என்று வேண்டி, அதே காவடியுடன் இங்கே வந்துள்ளேன்’ என்றார். அத்தோடு, மனுதாக்கல் செய்ய வருவோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார். போலீஸார் கடைசி வரை அவரை எதுவும் செய்ய முடியாது தவித்ததுதான் அங்கு நிலவிய பரபரப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x