Published : 20 Jan 2017 12:16 PM
Last Updated : 20 Jan 2017 12:16 PM

ஜல்லிக்கட்டு கோரி தமாகா மனித சங்கிலி போராட்டம்: ஜி.கே.வாசன்

ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெற வேண்டும் என்று கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெற வேண்டும் என்பதற்காக இன்று 20.01.2017 சென்னையில் த.மா.கா. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு - கலாச்சாரமான, பண்பாடு மிக்க விளையாட்டாகும். ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட தடையால் கடந்த சில வருடங்களாக இது நடைபெறவில்லை. இது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் மிகுந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவதற்கு சட்டப்பூர்வமான, முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் எண்ணமாகும். இதனையே த.மா.கா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மாணவர்கள், இளைஞர்கள் போன்றோர் கடந்த சில நாட்களாக ஒரு குறிக்கோளுக்காக நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நம்முடைய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் நியாயமாக அறவழியில் தங்களை வருத்திக்கொண்டு போராடி வருகிறார்கள். தமிழக மக்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் போன்றோரின் எழுச்சி, ஜல்லிக்கட்டு இனிமேல் நடைபெறுவது உறுதி என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஜல்லிக்கட்டின் அவசியத்தை, அவசரத்தை, நியாயத்தை, உண்மை நிலையை ஏற்றுக் கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழகத்தின் ஒரே குரலை பிரதிபலித்திருக்கிறார்கள்.

பீட்டா போன்ற அமைப்புகள் தங்கள் வரம்புக்குள் செயல்பட வேண்டும். அப்படி செயல்படாமல் கலாச்சாரம், பண்பாடு போன்ற உரிமைகளில் தலையிடுவதற்கு அரசு அனுமதி அளிக்க கூடாது. அதனையும் மீறி பீட்டா போன்ற அமைப்புகள் வரம்பு மீறி செயல்பட்டால் அந்த அமைப்புகளுக்கு நாட்டில் தடை ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.

மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை 100 சதவீதம் உறுதிப்படுத்தி அதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான உடனடி உத்தரவு பிறப்பிக்க கூடிய நிலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேலும் சட்டமன்றத்தைக் கூட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.

மாணவர்கள், இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள், ஆர்வலர்கள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் என ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்க வேண்டும்.

எனவே ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்ற அனைவருக்கும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு த.மா.கா. சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x