Published : 20 Jan 2017 11:49 AM
Last Updated : 20 Jan 2017 11:49 AM

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்ட நிலையில், கடைசி ஆயுதமாக தமிழக அரசே ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் இந்நடவடிக்கை பல்வேறு வினாக்களை எழுப்புகிறது. இப்படி ஓர் அவசரச் சட்டத்தை தமிழக அரசால் கொண்டு வர முடியும் என்றால், அதை ஏன் பொங்கலுக்கு முன்பே பிறப்பித்து பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதித்திருக்கக் கூடாது? இப்படி ஓர் அவசர சட்டம் கொண்டு வர முடியும் என்பது அப்போதே அரசுக்கு தெரியாதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இருப்பினும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான இன்னொரு முயற்சி என்ற வகையில் தமிழக அரசின் இந்த முடிவு தாமதமான ஒன்று என்றாலும் வரவேற்கத்தக்கது.

ஆனால், மத்திய அரசு அதற்கு ஒப்புக் கொள்ளாத நிலையில், தமிழக அரசே அவசர சட்டத்தை பிறப்பிக்க தீர்மானித்திருக்கிறது. அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசால் இயற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அரசு திருத்தம் செய்வது தலையை சுற்றி மூக்கைத் தொடும் செயலாகும்.

எனினும், அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், தமிழக அரசுக்கு வேறு வழியில்லை. தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், தமிழக ஆளுனர் அவசர சட்டத்தை பிறப்பிப்பார். அதன்பின்னர் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும். இந்நடைமுறைகள் அனைத்தும் முடிந்து அவசர சட்டம் பயன்பாடுக்கு வர 3 நாட்கள் வரை ஆகலாம்.

இப்போதைய நிலையில், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பார்களா? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும். ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் கூறியிருப்பது ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. அவசர சட்டம் பிறப்பிக்கும் விஷயத்தில் நடந்து கொண்டது போன்று பொறுப்பற்ற முறையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது. அது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் காட்சிப்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறுவதே தவறாகும். உண்மையில் பார்த்தால் காளைகளை அதன் இயல்புப்படி சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தான் விலங்குகள் வதையை தடுக்கும் செயலாகும்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் சுதந்திரமாக, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டுப் பாதையை கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டுப் பாதையில் செல்லும் காளைகளை கட்டுப்படுத்த இளைஞர்கள் முயல்வார்கள்; ஆனால், பெரும்பாலான நேரங்களில் காளைகள் எந்த தடையும் இல்லாமல் எல்லையைக் கடந்து சென்று விடும்.

யானைகள், குரங்குகள் போன்றவற்றை கட்டி வைத்து வித்தை காட்டுவதைப் போல காளைகள் காட்சிப் படுத்தப்படுவதில்லை. அவை, அவற்றின் இயல்புப்படி நடக்க ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப் படுகின்றன.

எனவே காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்வது தேவையற்றது. இதை உணர்ந்து தமிழக அரசின் வரைவு அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.

வரைவு அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் வரை தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு, வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x