Last Updated : 26 Nov, 2014 06:55 PM

 

Published : 26 Nov 2014 06:55 PM
Last Updated : 26 Nov 2014 06:55 PM

சோனியாவை சந்தித்து காங்கிரஸில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் புதன்கிழமை சந்தித்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அப்போது உடனிருந்தார்.

இது குறித்து குஷ்பு செய்தியாளர் களிடம் பேசுகையில், 'காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களையும் பார்த்து வளர்ந்தவள். அப்படி இருக்க வேறு கட்சியில் இருந்தேன். எனினும், என் மனதில் ஏதோ உறுத்தலாகவே இருந்தது. இன்று காங்கிரஸில் இணைந்த பிறகு மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது. சோனியாஜியின் வீட்டுக்கு சென்றபோது என்னை மிகவும் மதிப்புடன் வரவேற்றார். காங்கிரஸில் இணைந்தது மிகவும் பெருமையாகவும் உள்ளது. நாட்டுக்கு நல்லது செய்வதற்காக காங்கிரஸில் சேர்ந்துள்ளேன். கட்சி எனக்கு தரும் பணி தமிழகம் அல்லது வேறு எங்கு இருந்தாலும் அதனை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திமுகவில் அவமானம்?

திமுகவில் அவமானப்படுத்தப் பட்டதால் காங்கிரஸில் சேர்ந்தீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு, 'இதன் காரணத்தை நான் அப்போதும் கூறவில்லை. அதை இப்போது கூற வேண்டிய அவசியமில்லை’ என பதிலளித்தார்.

அவர், பாஜகவில் இணைவதாக எழுந்த பேச்சு குறித்த கேள்விக்கு, ஒரே பக்கமாக அடிக்கும் அலையுடன் போக வேண்டிய அவசியமில்லை. அதன் எதிர்ப்புறம் செல்வதில் தவறில்லை எனவும் குஷ்பு தெரிவித்தார். மதநல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ். இந்தக் கட்சியால் மட்டும்தான் நம் நாட்டில் ஒற்றுமையை வளர்க்க முடியும் என்பது எனது கருத்து என்று குஷ்பு விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் குஷ்பு பதிலளித்தார். அவருக்கு 5 மொழிகள் தெரியும்.

இளங்கோவன் விமர்சனம்

இந்த கூட்டத்தில் இளங்கோவன் கூறுகையில், ''தமிழகத்தில் பாஜக புறக்கணிக்கப்பட்ட கட்சி. அதில் சேர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை" என்று தெரிவித்தார். முன்னதாக குஷ்புவை அறிமுகப்படுத்திய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான முகுல் வாஸ்னிக், திரை உலகின் ஒரு பிரபல நட்சத்திரம் என்றும் சமூக சேவகர் என்றும் குஷ்புவை குறிப்பிட்டார். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியான ஷோபா ஓஜாவும் உடன் இருந்தார்.

குஷ்புவின் அரசியல் பிண்ணனி

44 வயதாகும் குஷ்பு, பாலியல் தொடர்பான கருத்துகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார். தமிழக மக்களுக்காக பாடுபடும் சிறந்த கட்சி எனக் கூறி 2010-ல் திமுகவில் இணைந்தார். கடந்த ஜூன் மாதம் அக்கட்சியை விட்டு விலகிய அவர் இப்போது காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x