Published : 25 Oct 2014 11:54 AM
Last Updated : 25 Oct 2014 11:54 AM

சோதனைகளை கடந்து நான் வெற்றி பெறுவேன்: ஜெயலலிதா

எல்லா சோதனைகளையும் கடந்து நான் வெற்றி பெறுவேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இறை அருள் எனக்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பது தான் எனது நம்பிக்கையின் அடிப்படை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தனது துயரங்களைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் உயிர்விட்ட 26 பேரின் குடும்பங்களுக்கு, அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 20-ம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில், தனது துயர் கண்டு தாளாமல் உயிர்நீத்த 193 பேரின் குடும்பங்களுக்கு, அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் நலன்களுக்காகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எனக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பொதுமக்கள்; என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள்; மாணவச் செல்வங்கள் என 193 பேர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி அறிந்த நான் மிகுந்த மன வேதனை அடைந்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

19.10.2014-ஆம் தேதியிட்ட எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 193 பேர்களோடு, மேலும் 26 பேர் பல்வேறு வழிகளில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று தற்பொழுது வந்திருக்கும் தகவல் என்னை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த 26 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு வழிகளில் உயிரிழந்த 26 பேர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் 219 பேர் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

எல்லா சோதனைகளையும் கடந்து நான் வெற்றி பெறுவேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இறை அருள் எனக்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பது தான் எனது நம்பிக்கையின் அடிப்படை.

எனவே, என் அன்புக்குரிய தமிழக மக்கள் யாரும் இனிமேல் இது போன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x