Published : 06 May 2016 07:55 AM
Last Updated : 06 May 2016 07:55 AM

சென்னையில் இன்று ஜெயலலிதா, கருணாநிதி பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சென்னையில் இன்று ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தலைவர்கள் முற்றுகையால் தலைநகரில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, விழுப்புரம் ஆகிய இடங்களில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசினார். நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம் செய்தார்.

அதேபோல திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வேனில் வீதிவீதியாக சென்று தனக்காக வாக்கு சேகரிக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டு காசிமேடு பெட்ரோல் பங்க் அருகில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். சூரிய நாராயண செட்டி தெரு - ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பேசுகிறார். தொடர்ந்து, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, சேணியம்மன் கோயில் தெரு வழியாக மார்க்கெட் தெரு - வ.உ.சி.சாலை சந்திப்பில் வாக் காளர்கள் மத்தியில் பேசுகிறார்.

அதன்பின், இளைய முதலி தெரு,வைத்தியநாதன் பாலம் வழியாக எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு வந்து அங்கு பேசுகிறார். எண்ணூர் நெடுஞ்சாலை- ஜேஜே நகர் சந்திப்பு மற்றும் மணலி சாலை எழில் நகரில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் இன்றும் நாளையும் 15 தொகுதிகளில் வேன் மூலம் பிரச்சாரம் செய்கிறார். இன்று மாலை சேப்பாக்கம் திரு வல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் சந்திப்பு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர், தாமஸ் சாலை (ஆயிரம் விளக்கு), எம்.எம்.டி.ஏ. காலனி (அண்ணா நகர்), முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் (மதுரவாயல்), அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் (அம்பத்தூர்), காமராஜர் சிலை (ஆவடி), பூந்தமல்லி பேருந்து நிலையம் (பூந்தமல்லி) ஆகிய 7 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

அதேபோல நாளை (7-ம் தேதி) மாலை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் பாலம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கும் கருணாநிதி, திருவான்மியூர் பேருந்து நிலையம் (வேளச்சேரி), மேடவாக்கம் சந்திப்பு (சோழிங்கநல்லூர்), அம்பேத்கர் சிலை அருகில் (தாம்பரம்), பல்லாவரம் பேருந்து நிலையம் (பல்லாவரம்), ஆலந்தூர் மின்வாரிய அலுவலகம் அருகில் (ஆலந்தூர்), தசரதபுரம் பேருந்து நிலையம் (விருகம்பாக்கம்), காமராஜ் காலனி (தியாகராய நகர்) ஆகிய இடங்களில் வேன் மூலம் பிரச்சாரம் செய்கிறார்.

முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஒரே நாளில் முற்றுகையிடுவதால் தலைநகர் சென்னையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x