Published : 24 Aug 2016 06:17 PM
Last Updated : 24 Aug 2016 06:17 PM

சென்னை, மாமல்லபுரத்தில் நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் கடல் மீன் உணவுகள் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில், நியாயமான விலையில் விற்பனை செய்ய ரூ.1 கோடியே 15 லட்சத்தில் இரண்டு நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுதொடர்பாக பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி எண் 110-ன் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:

4 லட்சம் மீன் உற்பத்தி

தமிழ்நாட்டில் மீன் உற்பத்தி 2010-11-ம் ஆண்டு 1 லட்சத்து 71 ஆயிரம் டன்னாக இருந்தது. இது, தற்போது 2 லட்சத்து 40 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இதனை 4 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர், தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டை, திருமங்கலக் கோட்டை, திருவாரூர் மாவட்டம் நல்லிக்கோட்டை, தேனி மாவட்டம் மஞ்சளாறு, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய 6 இடங்களில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்புப் பண்ணைகள் ரூ.13 கோடியே 65 லட்சத்தில் மேம்படுத்தப்படும். இதனால் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் இரண்டு கோடி மீன்குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்ய முடியும்.

மீன் இறங்கு தளங்கள்

கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடி கலன்களைப் பாதுகாப்பாக நிறுத்தவும், பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் கரை இறக்கவும், மீன் ஏலக்கூடம், வலை பழுதுபார்க்கும் மையம், குளிரூட்டப்பட்ட கிடங்கு ஆகிய அனைத்து வசதிகளுடன்கூடிய மீன் இறங்கு தளங்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, திருவாரூர் மாவட்டம் ஜாம்பவனோடை, தஞ்சை மாவட்டம் கரையூர் தெரு, தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறை, ராமநாதபுரம் மாவட்டம் மோர்பனை ஆகிய 5 இடங்களில் ரூ.9 கோடியே 77 லட்சத்தில் அமைக்கப்படும். இந்த இடங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைப்பதன் மூலம் ஆயிரத்து 379 படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும்.

ஆற்று முகத்துவாரம் பராமரிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் ஐந்து ஆற்று முகத்துவாரங்களில் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டில் கடலூர் மாவட்டம் முதுநகர், நாகை மாவட்டம் பழையாறு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் வெள்ளாறு, நாகை மாவட்டம் பழையாறு, வெட்டாறு ஆகிய மூன்று ஆற்று முகத்துவாரங்களில் ரூ.18 கோடியே 30 லட்சத்தில் பராமரிப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பசுமைப் பூங்காவில் மீன் காட்சியகம்

சென்னை சேத்துப்பட்டு பசுமைப் பூங்காவிற்கு பார்வையாளர்கள் மேலும் ஈர்க்கும் நோக்கில், சூரிய மின்வசதியுடன்கூடிய மீன் காட்சியகம், குளிர்சாதன கவிகை மாடத்தில் முப்பரிமாண காணொளிகளை காட்சிப்படுத்தும் மெய்நிகர காட்சியகமும் (Virtual Reality Center) ரூ. 6 கோடியே 75 லட்சத்தில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.

நவீன நகரும் கடல் மீன் உணவகங்கள்

மீனவ மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மீன் உணவுப் பொருட்களைத் தயாரித்திடவும், அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொதுமக்களுக்கு புரதச்சத்து நிறைந்த ருசியான தரமான மீன் உணவுப் பொருட்கள் கிடைக்கவும் தங்கும் வசதியுடன்கூடிய பயிற்சி மையம் மற்றும் உடனடி சமைத்து உடனடியாக சாப்பிடும் வகையில் கடல் மீன் உணவு வகைகளை தயாரிக்க ஒரு மைய சமையலறைக் கூடம் ரூ.8 கோடியே 32 லட்சத்தில் காசிமேடு பகுதியில் அமைக்கப்படும்.

மேலும், கடல் மீன் உணவுகள் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில், நியாயமான விலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் விற்பனை செய்ய ரூ.1 கோடியே 15 லட்சத்தில் இரண்டு நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும்.

கப்பற்படை வேலைக்குப் பயிற்சி

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அவர்கள் இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பற்படை ஆகியவற்றால் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற்று வேலை பெற முடியும். எனவே, ஆண்டுதோறும் 300 மீனவ இளைஞர்களுக்கு 3 மாத கால பயிற்சி வழங்கப்படும். அப்போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டம், ரூ.1 கோடியே 4 லட்சத்தில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்களால் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், மீனவர் வாழ்வாதாரமும் மேம்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x