Published : 23 Nov 2014 08:56 AM
Last Updated : 23 Nov 2014 08:56 AM

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு திடீர் நெருக்கடி

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் பெயரை போஸ்டர்களில் அச்சிடக் கூடாது என்றும் அவரை கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது என்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையின்போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவில்லை என்று பரவலாக புகார்கள் எழுந்தன. மேலும், தரமான சாலைகள் போடாத கான்ட்ராக்டர்கள் பெயரை வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளால் மேயருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேயர் பதவியை சைதை துரைசாமி ராஜினாமா செய்துவிட்டார் என்று நேற்று காலை சென்னை முழுக்க தகவல் பரவியது. இதனால், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பரபரப்பு நிலவியது.

இதுபற்றி விசாரித்தபோது, சைதை துரைசாமியின் பெயரை போஸ்டர்களில் அச்சிடக் கூடாது என்றும் அவரை கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது என்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

‘இந்தியா டுடே’ அளிக்கும் ‘சிறந்த நகரம் சென்னை’ என்ற விருதைப் பெறுவதற்காக மேயர் சைதை துரைசாமி நேற்று டெல்லி சென்றிருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜினாமா குறித்து கேட்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, அதே ஆண்டில் நடந்த சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x