Published : 28 Jan 2015 10:48 AM
Last Updated : 28 Jan 2015 10:48 AM

சென்னை துரைப்பாக்கத்தில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் கத்தி முனையில் கொள்ளையடித்தவர் சிக்கினார்: நெல்லையில் நள்ளிரவில் போலீஸார் அதிரடியாக சுற்றிவளைப்பு

சென்னையில் கத்தி முனையில் ஆசிரியையிடம் கொள்ளையடித்த நீராவி முருகனை சென்னை தனிப்படை போலீஸார் நெல்லையில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னை துரைப்பாக்கத்தில் வேலம் என்ற பள்ளி ஆசிரியை யிடம் கடந்த மாதம் 19-ம் தேதி கத்தி முனையில் ஒருவன் கொள்ளையடித்து விட்டு, கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான். இந்த கொள்ளை சம்பவத்தை தனது வீட்டின் மாடியில் இருந்தபடியே கல்லூரி மாணவி ஒருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் செல்போனில் வாட்ஸ்அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த பிரபல கொள்ளையன் நீராவி முருகன் என்பதும், அவனது கூட்டாளியாக வந்து மோட்டார் சைக்கிள் ஓட்டியது அரிகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. கொள்ளை நடந்த ஒரு வாரத்துக்குள் அரி கிருஷ்ணனை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான நீராவி முருகன் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

நீராவி முருகனின் சொந்த ஊரான தூத்துக்குடியில் சென்னை தனிப்படை போலீஸார் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முகாமிட்டு மாறு வேடங்களில் தொடர்ந்து கண்காணித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் நெல்லை பேருந்து நிலையத்தில் வைத்து அவனை தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். நேற்று காலை சென்னை அழைத்து வரப்பட்ட நீராவி முருகனிடம் அடையாறு போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஆசிரியை வேலம் உட்பட பல்வேறு இடங்களில் நீராவி முருகன் கொள்ளையடித் திருப்பது அவனது கூட்டாளி அரிகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எங்கெல்லாம் கொள்ளையடித்தார். அந்த நகைகளையெல்லாம் என்ன செய்தார்? திருட்டு நகைகளை விற்பனை செய்த கடைகள் உட்பட பல தகவல்களை நீராவி முருகனிடம் இருந்து போலீஸார் பெற்றுள்ளனர்.

யார் இந்த நீராவி முருகன்?

தூத்துக்குடி மாவட்டத்தில் கொப்பரை மற்றும் கொம்பன் என இரு கோஷ்டிகள் இருந்தன. இந்த இரு கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் அடிக்கடி தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இதில் கொப்பரை கோஷ்டியில் நீராவி முருகன் அடியாளாக இருந்தார். இந்த நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. துணை தலைவராக இருந்த ஏ.சி. அருணா என்பவருக்கும், மற்றொரு நபருக்கும் மோதல் இருந்தது. இந்நிலையில் ஏ.சி.அருணா 2011-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் நீராவி முருகன் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் விடுதலையான அவர் தலைமறைவாகி, தூத்துக்குடியை விட்டு வெளியேறி, திருப்பூரில் தஞ்சம் புகுந்தார். அங்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் கூட்டாளி ஒருவரை கொலை செய்தார். அதை தொடர்ந்து சென்னை வந்த நீராவி முருகன் பல கொள்ளைகளில் ஈடுபட்டு தற்போது கைதாகி இருக்கிறார்.

கண்காணிப்பு கேமராக்கள்

ஆசிரியை வேலத்திடம் கொள்ளை நடந்த இடமான ஆனந்த் நகரில் 3 மற்றும் 9-வது தெருவிலும், விநாயகா நகரிலும் நேற்று முன்தினம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து ரூ.1.25 லட்சம் செலவில் இந்த கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x