Published : 26 Apr 2015 01:24 PM
Last Updated : 26 Apr 2015 01:24 PM

சென்னை கிண்டியில் ரூ.150 கோடியில் தேசிய முதியோர் மருத்துவமனை: 10 ஏக்கர் இடத்தை மத்திய குழுவினர் ஆய்வு

நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக தேசிய முதியோர் மருத்துவமனை சென்னையில் அமைக்கப்படவுள்ளது. ரூ.150 கோடியில் அமையவுள்ள இந்த மருத்துவ மனைக்காக கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் தேசிய முதியோர் சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (முதியோர் மருத்துவமனை) அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி தேசிய முதியோர் மருத்துவமனை அமைக்க சென்னை கிண்டியில் உள்ள நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய (கிங் இன்ஸ்டிடியூட்) வளாகத்தில் 10 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து தமிழக அரசு அனுப்பியது.

இதற்கிடையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இடங்களை பார்வையிட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச்செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில், ஜிப்மர் மருத்துவ மனை டாக்டர் ஜெ.பாலசந்தர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கட்டிடக்கலை வல்லுநர் சச்சின் மகேந்துரு, மத்திய அரசின் சார்பு செயலாளர் எல்.சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 22-ம் தேதி தமிழகம் வந்தனர். இந்த குழுவினர் நேற்று கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து, தேசிய முதியோர் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், தாரித்ரி பாண்டா தலைமையிலான குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இடம் திருப்திகரம்

தேசிய முதியோர் மருத்துவ மனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டோம். இந்த இடம் திருப்திகரமாக உள்ளது. மாநில அரசு இதை இலவசமாக தருகிறது. மத்திய அரசின் 100 சதவீத நிதியில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனை ரூ.150 கோடியில் 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும். சிறப்பு டாக்டர்களைக் கொண்டு, சிறப்பு துறைகள் அமைக்கப்படும். முதியோர் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பும் கொண்டுவரப்படும்.

இந்தியாவில் டெல்லியில் மட்டுமே தேசிய முதியோர் மருத்துவமனை உள்ளது. 2-வதாக தமிழகத் தில் தேசிய முதியோர் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. தேசிய முதியோர் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ் ணன் கூறியதாவது:

இயற்கைச் சூழலுடன்..

தேசிய முதியோர் மருத்துவமனை அமைக்க சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஏக்கரில் மருத்துவமனை அமைகிறது. சுற்றிலும் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டாமல் இயற்கைச் சூழலுடன் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. வயது முதிர்வு காரணமாக முதியவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால், அவர்களுக்கு சிகிச்சை மட்டுமின்றி அதற்கும் மேலான பல்வேறு வசதிகள் இங்கு செய்துதரப்படும்.

இந்த மருத்துவமனையில் முதியோருக்கான சிகிச்சை மட்டுமின்றி பட்டமேற்படிப்புக் கல்வியும் வழங்கப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் பணி புரியும் முதியோர் மருத்துவ டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் தேசிய முதியோர் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பாம்புகள் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் குணசேகரன் கூறும்போது, ‘‘ஒருகாலத்தில் இங்கு பாம்புகள் வாழ்ந்துள்ளன. தற்போது இங்கு பாம்புகள் எதுவும் இல்லை. கிங் இன்ஸ்டிடியூட்டில் தேசிய முதியோர் மருத்துவமனை அமைக் கப்படுவது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x