Published : 23 Jul 2016 03:22 PM
Last Updated : 23 Jul 2016 03:22 PM

செங்கலால் முட்டுக்கொடுக்கப்பட்ட கட்டில்களில் சிகிச்சை: பவள விழா கண்ட மதுரை அரசு மருத்துவமனையில் அவலம்

பவள விழா கண்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முடநீக்கியல் துறை வார்டுகளில் செங்கல்களை கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ள கட்டில்களில் நோயாளிகள் சிகிச்சை பெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2,600 உள் நோயாளிகள், 9 ஆயிரம் வெளி நோயாளிகள் வருகின்றனர். மொத்தம் 45 சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. தினமும் 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.

உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற 2,518 படுக்கைகள் மட்டுமே உள்ளன. உள் நோயாளிகள் வருகைக்கு ஏற்றார் போல் படுக்கைகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை முடியும் முன்பே புதிய நோயா ளிகளுக்காக பழைய உள்நோயாளிகள் வெளி யேற நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல துறைகளில் இருக்கும் மருத்துவ உபகரணங்கள், வார்டுகளில் இருக்கும் கட்டில்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.

அண்ணா பஸ்நிலையம் விரிவாக்கப்பட்ட முடநீக்கியல் கட்டிடம், 2011-ம் ஆண்டு 27 கோடி ரூபாயில் தனியாருக்கு இணையாக பிரமாண்டமாக கட்டப்பட்டது. இங்கு 300 படுக்கைகள் உள்ளன. இந்த கட்டில்கள் அனைத்திற்கும், ஒரு புறம் உயரத்தை அதிகரிக்க செங்கற்களை கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தரத்தில் ஒரு புறம் கட்டில்கள் இருப்பதால் கை, கால்கள் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கட்டுகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள், இந்த கட்டில்களில் தூங்குவதற்கும், கீழே இறங்குவதற்கும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதார செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியது, முடநீக்கியியல் துறையில் நோயாளிகளுக்கான பிரத்தியேகமான கட்டில்கள் உள்ளன. அந்தளவுக்கு வசதியான கட்டில்கள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் செங்கல்களை கொண்டு முட்டுக் கொடுக்காத தரமான கட்டில்களையாவது வாங்கி பயன்படுத்த வேண்டும்.

முடநீக்கியல்துறையில்தான் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது. காப்பீட்டு திட்ட நிதியும் அதிகளவு செலவிடப்படுகிறது. ஒரு நோயாளியின் எடை குறைந்தபட்சம் 50 கிலோ முதல் 90 கிலோ வரையாவது இருக்கும். செங்க கொண்டு முட்டுக் கொடுப்பதால் கட்டில்கள் திடீரென்று சரிந்து விழுந்தாலோ நொறுங்கினாலோ நோயாளிகள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டில்கள் தரமும் மோசமாக இருக்கிறது. அதனால், செங்கல்களை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுவும் ஒரு வகை பாரம்பரிய சிகிச்சைதான்

இதுகுறித்து முடநீக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் புகழேந்தியிடம் கேட்டபோது, செங்கல்களை வைத்து கட்டிலின் உயரத்தை ஒரு பக்கம் உயர்த்தி வைத்தால் எலும்பு முறிவு ஏற்பட்ட உடல் பகுதிகளில் வலி ஏற்படாமல் தடுக்க முடியும். எல்லா எலும்பு முறிவுகளுக்கும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை. அதுபோன்றவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து கட்டுப்போட்டு இந்த கட்டிலில் படுக்க வைத்தால் அவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமலே குணமடைவார்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்டவரின் உடலின் பாரம் ஒரு பக்கம் நோக்கி இழுக்காமல் சமநிலைப்படுத்த கட்டில்களுக்கு செங்கல் கொடுத்து முட்டுக்கொடுகிறோம். மரக்கட்டை கொண்டு முட்டுக்கொடுக்கலாம். அதன் விலை அதிகமாக இருப்பதால் செங்கல் வைத்துள்ளோம். இதை அறுவை சிகிச்சை இல்லா மருத்துவம் என்றும் கூறலாம். இந்த சிகிச்சைக்கு ஆங்கிலத்தில் skeletal traction என்றும் கூறுவார்கள், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x