Published : 26 Jun 2016 08:10 AM
Last Updated : 26 Jun 2016 08:10 AM

சுவாதியை பின்தொடர்ந்த இளைஞர்தான் கொலையாளியா?- ரயில்வே போலீஸார் தேடுதல் வேட்டை

ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் கொலை:

பலரிடம் தீவிர விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குற்றப் பின்னணி உள்ளவர்தான் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளார் என்று கூறிய ரயில்வே டிஐஜி, குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்று தெரிவித்தார்.

சென்னை சூளைமேடு கங்கை யம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளம்பெண் சுவாதி (24), மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர். அலுவலகத்துக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் வந்த இவர், மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது சென்னை மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட்டுள்ளது. ரயில்வே போலீஸார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள் ளார். இதுபற்றி தந்தையிடம் சுவாதி அப்போதே தெரிவித்ததாக கூறப்படு கிறது. அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையாளியா? என்றும் விசாரணை நடக்கிறது.

சுவாதியை கொலை செய்த குற்றவாளி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து, பின்பக்கமாக (கோடம்பாக்கம் நோக்கி) சென்று, வலதுபுறம் இருந்த சுவரில் ஏறி குதித்துள்ளார். பின்னர், அங்குள்ள 7-வது குறுக்கு தெரு வழியாக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ரயில்வே போலீஸ் டிஐஜி ஜே.பாஸ்கரன் தலைமையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது டிஐஜி பாஸ்கரன் கூறியதாவது:

சுவாதி கொலை குற்றவாளியை 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்களுடன் பல்வேறு குழுக்களாக தேடி வருகிறோம். தாம்பரம், செங்கல்பட்டு, ஈரோடு, கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ரயில்வே இன்ஸ்பெக் டர்களும் இக்குழுவில் உள்ளனர்.

குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரால்தான் இதுபோன்ற கொடூர கொலையில் ஈடுபடமுடியும். இது திட்டமிட்ட படுகொலை. ஒருதலைக் காதல் விவகாரமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம்.

ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு ரயில்வே பாது காப்பு படையுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது, கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அவர் மின்சார ரயிலில் தாம்பரம் வரை சென்றார். அப்போது, பயணிகளிடம் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக கேட்டறிந்தார்.

சாய்ராம் கல்லூரி அல்ல

சுவாதி சாய்ராம் பொறியியல் கல் லூரியில் படித்ததாக நேற்று முன்தினம் வெளியான தகவல் தவறானது. வண்டலூர் அருகே உள்ள மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர் என்று தெரியவந்துள்ளது.

ரயில்வே அமைச்சர் இரங்கல்

இதற்கிடையில், சுவாதி கொலைக்கு ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ட்விட்டரில் இரங்கல் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்யுமாறு ரயில்வே வாரிய உறுப்பினருக்கு உத்தரவிட்டுள் ளார். அப்போது, சமூக ஆர்வலர்கள் பலரும், ‘‘ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்’’ என்று ட்விட்டரில் வலியுறுத்தினர்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி கூறும்போது, ‘‘சுவாதி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தமிழகத்தின் ரயில்வே போலீஸாருக்கு தெற்கு ரயில்வே முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 84 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ரயில் பயணத்தின்போது ஏற்படும் பிரச் சினைகள் குறித்து பெண்கள் புகார் அளிக்கும் வகையில் ‘182’ என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆதார் உதவியுடன் துப்பு துலக்க முடிவு

சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ரயில் பாதையில் கைப்பற்றப்பட்ட பட்டாக் கத்தி மற்றும் சுவாதியின் செல்போன் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு, அவரது நண்பர்கள், சக ஊழியர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆதார் தகவல் தொகுப்பில் அனைவரது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பட்டாக் கத்தியில் பதிவான ரேகைகளை அவற்றோடு ஒப்பிட்டு, குற்றவாளியை பிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆதார் அட்டை பெற்றவராக இருந்தால், இதன்மூலம் அவரை எளிதாக பிடிக்க முடியும் என்கின்றனர் ரயில்வே போலீஸார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x