Last Updated : 01 Sep, 2014 09:51 AM

 

Published : 01 Sep 2014 09:51 AM
Last Updated : 01 Sep 2014 09:51 AM

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 15 சதவீதம் சரிவு: தொடர் விபத்துகளும், கெடுபிடிகளுமே காரணம்

தொடர் விபத்து மற்றும் அரசின் கெடுபிடிகள் காரணமாக, சிவகாசி யில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 10 முதல் 15 சதவீதம் வரை குறைந் துள்ளது.

பட்டாசு உற்பத்தியில் சிவ காசி நாட்டிலேயே சிறப்பிடம் பிடித்து வருகிறது. வறட்சி, விவசாய மின்மை போன்ற காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 780 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

இதன்மூலம் 2 லட்சத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழிலாகச் செயல்படும் காகித ஆலைகள், அச்சுத் தொழில், வாகனப் போக்கு வரத்து, சுமைப் பணி, வெடி பொருள் மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர், விற்பனையாளர் கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலை பெற்று வருகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு மூலப் பொருள்களான அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பெரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலுமினியக் கம்பி, ஸ்பார்க்லர் உள்ளிட்ட பொருள்களின் விலைக ளும், இந்த ஆண்டு 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த ரசாய னங்களை பயன்படுத்தி, சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள், ஒளி சிந்தும் பட்டாசுகள், இவை இரண்டும் இணைந்தவகை என 3 வகையான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வகையிலும் சுமார் 200 முதல் 250 பட்டாசு ரகங்கள் உற் பத்தி செய்யப்படுகின்றன.

தீபாவளி, தசரா பண்டி கைகளுக்காக மட்டுமே சீசன் தொழிலாக நடைபெற்ற பட்டாசு உற்பத்தி, தற்போது ஆண்டு முழு வதும் நடக்கிறது. தீபாவளி, தசரா பண்டிகைகள் தவிர திரு மணம் உள்ளிட்ட அனைத்து விழாக் களிலும் பட்டாசு வெடிக்கப் படுவதே இதற்குக் காரணம்.

நாட்டின் மொத்த தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதி பட்டாசுகள் பூர்த்தி செய்கின்றன. இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனால் கடந்த ஆண்டு சிவகாசி அருகே யுள்ள முதலிபட்டியில் நடந்த வெடி விபத்தில் 40 பேர் இறந்தது மற்றும் சிறு சிறு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகளாலும், உரிய அனுமதி யின்றி, விதிமுறை மீறல்கள் இருந்த தாலும் 160 பட்டாசு ஆலைக ளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. சுமார் ஒன் றரை மாதம் உற்பத்தி நிறுத்தப் பட்டது. இதனால் சிவகாசி பகுதியில் சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வராஜ் கூறும்போது, வட மாநிலங்களில்தான் பட்டாசு விற் பனை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு மற்றும் திருமணங்கள், விழாக்கள் போன்றவை அதிகம் நடைபெறாததால் வடமாநிலங்க ளில் பட்டாசு விற்பனை குறைந் துள்ளது.

மேலும், விதிமுறைகள் மீறப் பட்டதாக 160 பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலையும், இந்த ஆண்டு இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிவகாசியில் 10 முதல் 15 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது என்றார்.

‘சீனப்பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்’

மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தி கூறும்போது, சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உரிமம் இன்றி கருந்திரி தயாரிக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், கருந்திரி உற்பத்தி குறைந்துள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் போதிய இடவசதி இல்லாததால், பலர் வெளிநபர்கள் தயாரித்த கருந்திரிகளையே கொள்முதல் செய்து வந்தனர். தற்போது அது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டும் நூற்றுக் கணக்கான கண்டெய்னர்களில் சீனப்பட்டாசுகள் இந்தி யாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீனப்பட்டாசுகள் விற்பனைக்கு வந்தால், சிவகாசி பட்டாசுத் தொழில் பெரும் சரிவைச் சந்திக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத் தில் சிறப்புக் கவனம் செலுத்தி சீனப் பட்டாசுகளுக்கு தடை விதித்து விற்பனை செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x