Last Updated : 22 Dec, 2014 08:41 AM

 

Published : 22 Dec 2014 08:41 AM
Last Updated : 22 Dec 2014 08:41 AM

சிறுநீரக கோளாறால் ஒரே கிராமத்தில் பலர் பலி: காரணத்தை அறிய மருத்துவக் குழு முகாம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிராமத்தில் சிறுநீரகக் கோளாறால் அடுத்தடுத்து 40-க்கும் அதிகமானோர் பலியானதால், மருத்துவக் குழுவினர் முகாமிட்டு உயிரிழப்புக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

திருச்சுழி அருகேயுள்ள தும்மு சின்னம்பட்டி கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதியில் விவசாயம் பொய்த்ததால், பலர் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.

2013-ம் ஆண்டில் கிராமத்தில் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏராளமானோர் சிறு நீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டனர். கிராமத்துக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது உறுதிப்படுத் தப்பட்டது.

இதையடுத்து, குடிநீரில் உப்பின் அளவு அதிகமாக இருக்கலாம் என்ற அடிப்படையில், தும்முசின்னம்பட்டியின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் 3 இடங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டு, சென்னையிலுள்ள கிங் பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப் பட்டது. ஆனால், ஆய்வில் தண்ணீர் சுத்தமாக, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளதாக சான்றளிக்கப்பட்டது.

பொது மருத்துவப் பரிசோதனை

ஆனாலும், தொடர்ந்து கிராமத்தில் பலருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. கடந்த 8 மாதங்களில் மட்டும் அடுத்தடுத்து 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு சிறுநீரக கோளாறுதான் காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறைக்கும், அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயிரிழப்புக் கான காரணத்தையும், சிறுநீரகக் கோளாறுக்கான காரணத்தையும் கண்டறிய அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து 14 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொது மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டது. மருத்துவ முகாமில் 600-க்கும் அதிகமானோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில், 158 பேருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.இவர் களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் நேற்று முன்தினம் பரி சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் எம்.கதிரேசன், துணை இயக்குநர் சம்பத் ஆகி யோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் கதிரேசன் கூறியது: இந்தக் கிராமத்தில் ஏராளமா னோர் சிறுநீரக கோளாறால் பாதிக் கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக் கிறது. 14 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு நடத்தப்பட்ட பரிசோ தனையில் வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மூட்டு வலிக்காக பலர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாமல், மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலமும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேவேளையில், குழந்தை களும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேறு என்னென்ன காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வு செய்து வருகிறோம். இந்தக் கிராம மக்கள், சாயல்குடியிலிருந்து குறைந்த விலைக்குக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் கருவாடுகளை அதிகம் உண்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மீன், கருவாடுகள் ஆகியவற்றையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதிக பாதிப்பு கண்டறியப்படுவோருக்கு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தீவிர சிகிச்சைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மீன், கருவாடுக்குத் தடை

தும்புசின்னம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.எம்.செல்வராஜிடம் கேட்டபோது, ‘குறைந்த விலைக்குக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் கருவாடுகளை அதிகமாக உண்பதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, கிராமத்தில் மீன் மற்றும் கருவாடு விற்பனை மற்றும் உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருக்கும் தும்முசின்னம்பட்டி கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x